கர்நாடகாவில் பஜ்ரங்தள நிர்வாகி வெட்டிக் கொலை; சிவமொக்காவில் பதற்றம்


கர்நாடகாவில் பஜ்ரங்தள நிர்வாகி வெட்டிக் கொலை; சிவமொக்காவில் பதற்றம்
x
தினத்தந்தி 21 Feb 2022 10:48 AM IST (Updated: 21 Feb 2022 10:48 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் பஜ்ரங்தள நிர்வாகி வெட்டிக் கொலை; சிவமொக்காவில் பதற்றம் நிலவுவதால் 144 தடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு

கர்நாடகா மாநிலம் சிவமொக்கா நகர் சி.கே.கட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா (வயது 24). இவர் பஜ்ரங்தள் என்ற இந்து அமைப்பு பிரமுகர் ஆவார். இந்த நிலையில் நேற்று இரவு ஹர்ஷா, தொட்டபேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பாரதி காலனி ரவிவர்மா வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் கும்பல் வழிமறித்தது.

அவர்களிடம் இருந்து ஹர்ஷா தப்பிக்க முயன்றார். ஆனாலும் மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

  இதுபற்றிய தகவல் அறிந்ததும் தொட்டபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான ஹர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மெக்கான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இந்து அமைப்பு பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது.

  இதனால் இருதரப்பினர் அங்கு குவிந்தனர். அந்த சமயத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் அங்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

சீகேஹட்டி பகுதியில் பல வாகனங்கள் தீ வைத்த எரிக்கப்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

  இந்து அமைப்பு பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதால் சிவமொக்கா நகரில் பதற்றமான சூழல் நிலவியது. ஷிவமொகா நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக சிவமொக்கா மாவட்ட காவல் துணை ஆணையர் செல்வமணி தெரிவித்துள்ளார்.  ஹர்ஷாவை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது தெரியவில்லை.

  இதுகுறித்து தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக ‘ஹிஜாப்’ விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் இந்த விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறப்படுகிறது. இந்த கோணத்திலும் போலீசார் விவசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவமொக்கா நகரில் நேற்று நள்ளிரவில் இந்து அமைப்பு பிரமுகரான ஹர்ஷா படுகொலை செய்யப்பட்டார். ‘ஹிஜாப்’ விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதனால் சிவமொக்காவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று (திங்கட்கிழமை) சிவமொக்கா மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டுள்ளார்.

பஜ்ரங் தள நிர்வாகி படுகொலை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா மந்திரி கே.எஸ்.ஈஸ்வரப்பா, இந்த கொலையால் தாம் மிகவும் வருத்தமடைந்ததாக கூறினார். நிலைமை குறித்து ஆராய தாம் சிவமொக்கா செல்வதாகவும், ரவுடியிசத்தை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story