போர் நெருக்கடி; உக்ரைனில் இருந்து 182 இந்தியர்களுடன் டெல்லி வந்த விமானம்
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த கூடும் என்ற அச்சத்தில் சிறப்பு விமானத்தில் 182 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்து உள்ளனர்.
புதுடெல்லி,
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் மீது முதல்கட்ட பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ளது. சர்வதேச அளவில் அவசர நிதி பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்விஃப்ட் முறையையும் அமெரிக்கா துண்டித்துள்ளது.
எனினும், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என கூறும் ரஷியா, பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவே படைகளை குவித்துள்ளதாக சாக்குபோக்கு கூறிவருகிறது. அதே வேளையில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டு, அவர்கள் மூலம் உக்ரைனுக்குள் ஊடுருவதற்கான வேலைகளை ரஷியா செய்து வருகிறது.
இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இதற்கு உடனடியான எந்தவிதமான பதிலையும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த கூடும் என்ற சூழலில் பல்வேறு நாடுகளும் தங்களுடைய தூதர்களை திரும்ப பெற்றுள்ளன. இதேபோன்று மாணவர்கள் உள்பட இந்தியர்களை நாடு திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதற்கேற்ப இந்திய அரசு, உக்ரைனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள், குடிமகன்கள் உள்பட பலரை ஏற்றி கொண்டு நாடு திரும்புகிறது. இதன்படி, 241 பயணிகளுடன் ஏர் இந்தியா சிறப்பு விமானம் உக்ரைனில் இருந்து டெல்லிக்கு கடந்த செவ்வாய் கிழமை புறப்பட்டது.
எனினும், அந்த விமானம் 10.15 மணிக்கு இந்தியா வரவேண்டும். ஆனால், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஒன்றரை மணிநேரம் காலதாமதத்துடன் இரவு 11.30 மணிக்கு விமானம் வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், போர் பதற்றம் அதிகரித்து உள்ள சூழலில், இந்தியர்களை நாடு திரும்ப செய்யும் பணியில் இந்தியா முனைப்புடன் உள்ளது. இதன்படி, மாணவர்கள் உள்பட 182 இந்தியர்களை ஏற்றி கொண்டு உக்ரைனின் கீவ் நகரில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று இன்று காலை 7.45 மணியளவில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்து உள்ளது.
Related Tags :
Next Story