உக்ரைன்-ரஷியா போர்: இந்தியாவுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் - பாரத ஸ்டேட் வங்கி கணிப்பு
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் இந்தியாவுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி கணித்துள்ளது.
கொல்கத்தா,
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் உலக அளவில் பொருளாதாரம் மிகப்பெரும் சரிவை எதிர்நோக்கி உள்ளது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்த போரால் இந்தியாவுக்கு ரூ.95 ஆயிரம் கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அந்த அறிக்கையில், ‘உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை கடந்து விட்டது. அத்துடன் ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது. எனவே விலையை கட்டுப்படுத்துவதற்காக பெட்ரோலிய பொருட்களுக்கான கலால் வரியை மத்திய அரசு குறைத்தால், மாதம் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு குறைக்கப்படும் கலால் வரி அடுத்த நிதியாண்டிலும் தொடர்ந்து, 2023-ம் நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வும் சுமார் 8-10 சதவீதம் அதிகரித்தால், 2023-ம் நிதியாண்டில் அரசின் வருவாய் இழப்பு சுமார் ரூ.95,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை இருக்கும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story