விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது: சென்னையை சேர்ந்த பயிற்சி பெண் விமானி பலி


விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது: சென்னையை சேர்ந்த பயிற்சி பெண் விமானி பலி
x
தினத்தந்தி 27 Feb 2022 5:28 AM IST (Updated: 27 Feb 2022 5:28 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் சென்னையை சேர்ந்த பயிற்சி பெண் விமானி பலியானார்.

ஐதராபாத்,

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு பிளைடெக் என்கிற தனியார் விமான பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த மகிமா கஜராஜ் (வயது 29) என்கிற பெண் விமானிக்கான பயிற்சியை பயின்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை இவர், விமான பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான ‘செஸ்னா 152’ ரக விமானத்தில் ஆந்திராவின் குண்டூர் நகரில் இருந்து தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்துக்கு புறப்பட்டார்.

2 இருக்கைகளை கொண்ட அந்த சிறிய விமானத்தில் பயிற்சி விமானியான மகிமா மட்டுமே பயணித்தார்.

இந்த நிலையில் காலை 10.50 மணியளவில் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள துங்கத்தூர்த்தி கிராமத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்குள்ள காலி நிலத்தில் விழுந்து நொறுங்கியது.

நடுவானில் இருந்து அதிவேகத்தில் விமானம் தரையில் விழுந்ததால் அங்கு குண்டு வெடித்ததுபோல் பயங்கர சத்தம் கேட்டது. இதை கேட்டு பீதியடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். காலி நிலத்தில் விமானம் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த கோர விபத்தில் விமானம் முற்றிலுமாக உருக்குலைந்து போனது. இதில் விமானத்தில் பயணித்த மகிமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துபோனது.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மகிமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இதுபற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்தை நேரில் பார்த்த இருவர், காற்றில் எதையோ மோதிய பிறகு விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்ததுபோல் தெரிந்ததாகவும், அது உயர்அழுத்த மின்கம்பிகளாக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

இதனிடையே மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா இந்த விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “தெலுங்கானாவில் நடந்த விமான விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். துரதிர்ஷ்டவசமாக ஒரு பயிற்சி விமானியை நாம் இழந்துவிட்டோம். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும், அவரின் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்து நடந்த இடத்துக்கு விசாரணை குழு விரைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Next Story