உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள்; கர்நாடக மந்திரி உற்சாக வரவேற்பு


உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள்; கர்நாடக மந்திரி உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 27 Feb 2022 11:06 AM IST (Updated: 27 Feb 2022 11:06 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் போர் சூழலில் சிக்கி தவித்து, நாடு திரும்பிய மாணவர்களை கர்நாடக மந்திரி அசோகா இன்று உற்சாகமுடன் வரவேற்றுள்ளார்.


பெங்களூரு,



உக்ரைன் மற்றும் ரஷியா இடையே ஏற்பட்டுள்ள போரால் பல்வேறு நாட்டு மக்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.  உக்ரைனில் சிக்கியிருக்கும் சொந்த நாட்டு மக்களை மீட்பதுதான் இந்தியாவுக்கு உடனடி சவாலாக மாறியிருக்கிறது. மாணவர்கள் உள்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாக கடந்த 24-ந்தேதி மத்திய அரசு அறிவித்து இருந்தது.

அங்கு போர் மேகம் சூழ்ந்ததும் கடந்த 22-ந்தேதி ஏர் இந்தியா விமானம் மூலம் 240 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். ஆனால் கடந்த 24-ந்தேதி போர் தொடங்கியதுமே, உக்ரைனின் வான்பகுதி பயணிகள் விமான போக்குவரத்துக்கு மூடப்பட்டது. இதனால் அங்கு சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்பதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

உக்ரைனில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்பி வரும் மாணவர்கள் மற்றும் குடிமக்களுக்கான தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை அடுத்தடுத்து செய்து வருகிறது.  இதன்படி, ருமேனியா, போலந்து மற்றும் உக்ரைனுக்கு அருகேயுள்ள பிற நாடுகளின் வழியே இந்திய குடிமக்களை அழைத்து வர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதற்காக 2 ஏர் இந்தியா விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  தொடர்ந்து தேவைக்கேற்றபடி விமானங்களை அனுப்பவும் முடிவு செய்துள்ளது.

இந்தியர்களை மீட்க சிறப்பு குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டது.  அதன்படி உக்ரைன்வாழ் இந்தியர்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் அந்தந்த நாடுகளின் தலைநகரான முறையே புகாரெஸ்ட் மற்றும் புதாபெஸ்டுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.  தொடர்ந்து 2 விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.

உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 240 இந்தியர்களுடன் ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டுவில் இருந்து புறப்பட்ட 3வது விமானம் 'ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் இன்று காலை 10 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது.  அதில் பயணம் செய்தவர்களை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் 5 பேர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். இதேபோன்று கேரள மாணவர்கள் 11 பேர் வந்துள்ளனர். மாணவர்களை பெற்றோர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.  டெல்லியில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு நகருக்கும் மாணவர்கள் வந்தடைந்துள்ளனர்.

கர்நாடகாவை சேர்ந்த மொத்தம் 386 பேர் உக்ரைனில் உள்ளனர்.  அவர்களில் 5 பிரிவுகளை சேர்ந்த ஒரு குழு பெங்களூருவை வந்தடைந்தது.  அவர்களை மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி மற்றும் கர்நாடக மந்திரி ஆர். அசோகா ஆகியோர் உற்சாகமுடன் வரவேற்றனர்.


Next Story