உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க நேரில் செல்லும் மத்திய மந்திரிகள்


உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க நேரில் செல்லும் மத்திய மந்திரிகள்
x
தினத்தந்தி 1 March 2022 4:05 AM IST (Updated: 1 March 2022 4:05 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைக்க மத்திய மந்திரிகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

ரஷியாவின் படையெடுப்பால் போர்க்களமாகி இருக்கும் உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இதில் பெரும்பாலும் மாணவ-மாணவிகள் ஆவர்.

ரஷிய படைகளின் குண்டுமழை காரணமாக உக்ரைனில் இருந்து இந்தியர்களை நேரடியாக மீட்க முடியவில்லை. எனவே ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.

அந்தவகையில் கடந்த 4 நாட்களாக பல விமானங்கள் மூலம் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தாய்நாடு திரும்பி உள்ளனர். அத்துடன் இந்த பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

மந்திரிகளுடன் மோடி ஆலோசனை

இந்த பணிகளை மேலும் துரிதப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தினார். வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் உள்பட பல்வேறு மந்திரிகளும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஹர்சவர்தன் ஷிரிங்லா உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், உக்ரைன்வாழ் இந்தியர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தவும், இந்த பணிகளை ஒருங்கிணைப்பதற்கும் 4 மத்திய மந்திரிகளை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு நேரடியாக அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதாவது ருமேனியா, மால்டோவா, சுலோவாகியா, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளுக்கு இந்த மந்திரிகளை அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

4 மத்திய மந்திரிகள்

சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, வீட்டுவசதி துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி, சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி வி.கே.சிங் ஆகிய 4 மந்திரிகள் இந்த பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதில் ருமேனியா மற்றும் மால்டோவா நாடுகளுக்கு ஜோதிராதித்ய சிந்தியாவும், சுலோவாகியாவுக்கு கிரண் ரெஜிஜூவும், ஹங்கேரிக்கு ஹர்தீப் சிங் புரியும், போலந்துக்கு வி.கே.சிங்கும் சிறப்பு தூதர்களாக செல்கின்றனர்.

Next Story