பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் வறுமை அதிகரிப்பு; சீதாராம் யெச்சூரி


பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் வறுமை அதிகரிப்பு; சீதாராம் யெச்சூரி
x
தினத்தந்தி 2 March 2022 3:24 PM IST (Updated: 2 March 2022 3:24 PM IST)
t-max-icont-min-icon

ஆளும் பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கயால் இந்தியாவில் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துள்ளதாக சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

கேரளா,

கேரளாவின் எர்ணாகுளம் நகரில் உள்ள மரைன் டிரைவ் பகுதியில் நடைபெற்று வரும் சி.பி.எம். கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய சி.பி.எம். கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் நிகழ்வுகள் குறித்தும் , தற்போதய சூழல் குறித்தும் விரிவாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மூலம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்த நேரத்தில் அதை எதிர்கொள்வதில் மத்திய அரசு படுதோல்வி அடைந்துவிட்டது. மேலும் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளை வசீகரிக்கும் செயல்களில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இது போன்ற மத்திய அரசின் தெளிவற்ற குளறுபடியான வெளிநாட்டு கொள்கை மூலம் இந்தியாவிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வளைகுடா, லிபியா போன்ற நாடுகளில் யுத்தம் நடந்தபோது, அங்கு சிக்கிய இந்தியர்களை வெகுவிரைவாக மீட்ட சரித்திரம் நமக்கு உண்டு. ஆனால் இந்தியா இம்முறை உக்ரைன் நாட்டில் சிக்கியவர்களை மீட்பதில் தீவிரமாக செயல்படவில்லை என்றே கூறமுடியும். லட்சக்கணக்கில் இந்தியர்கள் இதற்கு முன்பு போர் நடந்த வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 

இப்போது மோடிக்கு நன்றி கூறும் கார்டுகளும் புகைப்பட சூட்டிங் மட்டுமே விளம்பரத்திற்காக நடைபெறுகிறது.. அது உண்மை அல்ல. உண்மையில் உக்ரைன் நாட்டில் சிக்கியவர்களை மீட்பதில் மீட்புப்பணிகள் தொய்வடைந்து விட்டது. மதவாத சக்திகளின் பிடியில் ஆட்சிப் பொறுப்பு ஏற்று சிக்கியுள்ள பி.ஜே.பி.யை தனிமைப்படுத்த ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு செயல்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

ஜனநாயக சக்திகளை இடது முன்னணியுடன் ஒரே அணியில் நிறுத்த அனைவரும் முயல வேண்டும். அதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட உறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சூசகமாக சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். மத்தியில் இடது முன்னணி காங்கிரசுடன் இணைந்து செயல்படுவதை தேசிய தலைமை அங்கீகரித்துள்ளது என சுட்டிக்காட்டிய எச்சூரி கேரளாவில் அது ஏற்புடையது அல்ல என்றும், கேரளாவில் சி.பி.எம். கட்சியின் முக்கிய எதிரி காங்கிரஸ் கட்சிதான் என்றும் தெரிவித்தார். தேசிய அளவில் காங்கிரசுடன் வைத்துள்ள உறவு கேரள மாநில அரசியலில் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது உண்மையே என தெரிவித்தார்.

மேலும் உலக பிரச்சனை குறித்து பேசிய அவர் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்கா அதிபர் பைடன் ஆகியவர்களின் சுயநலத்தால் பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளதாக குற்றம் சாட்டினார். அமெரிக்காவின் தூண்டுதலும் , புதினின் சுயநலமும் சேர்ந்து இந்த போர் மூள காரணமாகி விட்டது என தெரிவித்தார்.

Next Story