மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்; திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி!
மேற்கு வங்காளத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 102 இடங்களில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் பிப்ரவரி 27ந் தேதியன்று 108 நகர்ப்புற இடங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் ஆங்காங்கே வன்முறை மற்றும் சட்டவிரோத சம்பவங்கள் அரங்கேறின. இந்த தேர்தலில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறினாலும் ஒட்டு மொத்தமாக தேர்தல் அமைதியாக நடந்திருப்பதாக தேர்தல் கமிஷன் கூறியது.
இந்த நிலையில், அங்கு 108 இடங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மேற்கு வங்காள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்று அமோக வெற்றி பெற்றது. 108 நகராட்சிகளில் 102 இடங்களை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.
மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
ஆனால், டார்ஜிலிங் நகராட்சியில் மட்டும் முடிவுகள் சற்று வேறு விதமாக அமைந்தது. அங்குள்ள 32 இடங்களில், 18 இடங்களை முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் உள்ளூர் கட்சியான ஹம்ரோ கட்சி வெற்றி பெற்றது. டார்ஜிலிங் நகராட்சியை அக்கட்சி கைப்பற்றியது.
எனினும் அக்கட்சியின் தலைவர் அஜோய் எட்வார்ட்ஸ் தோல்வியடைந்தார். ஆனாலும் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பிற கட்சியிலிருந்து போட்டியிட்ட முக்கிய பிரமுகர்களை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தனர்.
டார்ஜிலிங் நகராட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2 இடங்களை மட்டுமே வென்றது. பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் ஒரு நகராட்சியை வென்றன.
டார்ஜிலிங்கில் தற்போது பாஜகவை சேர்ந்தவர்களே எம்.பி. ஆகவும் மற்றும் எம்.எல்.ஏ ஆகவும் உள்ளனர். இருந்தும் அக்கட்சியால் டார்ஜிலிங்கில் உள்ள 32 வார்டுகளில் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story