உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த பஞ்சாப் மாணவர் உயிரிழப்பு


உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த பஞ்சாப் மாணவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 2 March 2022 5:40 PM IST (Updated: 2 March 2022 5:52 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் நாட்டில் ரஷிய தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்தார்.

கீவ்,

ரஷியாவின் தாக்குதலுக்கு ஆளான உக்ரைனின் கீவ் நகரம் ஏவுகணை தாக்குதலால் சின்னா பின்னமாகி வருகிறது. 

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கியவுடன், உக்ரைன் தனது வான்பகுதியை மூடிவிட்டது. இதனால், அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

மாற்று திட்டமாக, உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, போலந்து, ஹங்கேரி, சுலோவாகியா ஆகியவற்றுக்கு இந்தியர்களை வரவழைத்து அங்கிருந்து அவர்கள் மீட்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

‘ஆபரேஷன் கங்கா’ என்ற இந்த மீட்பு பணியை மேற்பார்வையிட 4 மத்திய மந்திரிகளை பிரதமர் மோடி அனுப்பி வைத்துள்ளார். மீட்பு பணியில் ஒட்டுமொத்த அரசு எந்திரமும் 24 மணி நேரமும் இயங்கி வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில்,   நேற்று நடந்த 6-ம் நாள் போரில் கார்கிவ் நகரில் ரஷிய படையினரின் குண்டுவீச்சில் இந்திய மாணவர் ஒருவர் பலியாகி இருப்பது, அங்கு தவித்து வருகிற இந்திய மாணவர்கள் மத்தில் தீராத சோகத்தையும், இந்தியாவில் உள்ள அவர்களது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. பலியான மாணவர் நவீன் சேகர கவுடா ஆவார். இவர் கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம், சலகேரியை சேர்ந்த சேகர கவுடாவின் மகன் ஆவார்.

மாணவர் நவீன் பலியானதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

அது, தலைநகர் டெல்லியில் உள்ள ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கான தூதர்களை அழைத்துப் பேசியது. கார்கிவ் மற்றும் சண்டை நடக்கிற பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், அவசரமாகவும் வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. இதே போன்று ரஷியா மற்றும் உக்ரைனில் உள்ள இந்திய தூதர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

இந்தநிலையில்,  உக்ரைன் நாட்டில் ரஷிய தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்தார்.  உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த பஞ்சாபை சேர்ந்த சந்தால் ஜிண்டால் என்ற மாணவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் - ரஷியா போரில் மேலும் இந்திய மாணவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story