உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை


உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில்  உயர்மட்ட ஆலோசனை
x
தினத்தந்தி 2 March 2022 8:43 PM IST (Updated: 2 March 2022 8:44 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

புதுடெல்லி,

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் 7-வது நாளாக தொடர்கிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. 

கீவ் நகரிலுள்ள இந்திய தூதரகம் இன்று மூடப்பட்ட நிலையில், கார்கிவ் நகரைவிட்டு அனைத்து இந்தியர்களும் மாலை 6 மணிக்குள் (இந்திய நேரடிப்படி இரவு 9.30 மணி) நடந்தாவது வெளியேறுங்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு இந்தியர்கள் வந்து கொண்டுள்ளனர்.  இதுவரை 17 ஆயிரம் பேர் வந்தடைந்துள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

 எல்லைகளில் உள்ள இந்தியர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,  உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில்  உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மூத்த மந்திரிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில்,  ரஷிய அதிபர் விளாடிமர் புதினுடன்  தொலைபேசி வாயிலாக  இரண்டாவது முறையாக பிரதமர் மோடி பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story