உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 32 கிலோ தங்க நகைகள் பறிமுதல்..!
மும்பையிலிருந்து உரிய ஆவணங்களின்றி ரெயிலில் கொண்டு வரப்பட்ட 32 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்,
மும்பை-புவனேஸ்வர் கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உரிய ஜிஎஸ்டி ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.16 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
முன்னதாக, நேற்று மும்பையைச் சேர்ந்த ஹஸ்முக்லால் ஜெயின், சுர்சே சஹாதேவ் கரே, மகேஷ் போம்சர் மற்றும் தீபக் படேல் ஆகிய 4 பேரும் ஒவ்வொரு பையிலும் தலா 8 கிலோ தங்க நகைகள் கொண்ட 4 பைகளுடன் மும்பை-புவனேஸ்வர் செல்லும் கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.
அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த ரெயில்வே போலீசார் அவர்களது பைகளை சோதனை செய்ததில் 32 கிலோ தங்க நகைகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த நகைகளுக்கு உரிய ஜிஎஸ்டி ஆவணங்கள் இல்லாததும் அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த நகைகளின் மதிப்பு ரூ. 16 கோடி என்றும் அந்த நகைகளை அவர்கள் புவனேஸ்வரில் உள்ள வியாபாரிகளுக்கு விற்க திட்டமிட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story