வகுப்பறையில் கிரிக்கெட் விளையாடிய போது மோதல் - சக மாணவர்கள் தாக்கியதில் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
வகுப்பறையில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட மோதலில் சக மாணவர்கள் தாக்கியதில் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் யூசூப்குடா என்ற பகுதியில் சாய் குரூபா உயர்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி உள்ளது.
அந்த பள்ளிக்கூடத்தில் நேற்று 10-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் உணவு இடைவேளையின் போது வகுப்பறைக்குள் காதிதத்தால் ஆன பந்தை வைத்து கிரிக்கெட் விளையாடினர். அப்போது, மன்சூர் (வயது 15) என்ற மாணவன் தனது வகுப்பில் பயிலும் சக மாணவன் மீது காகிதத்தால் ஆன பந்தை எறிந்துள்ளான். இதனால், மன்சூருக்கும் அந்த மாணவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அந்த மாணவன் தனது மற்றொரு நண்பனுடன் சேர்ந்து மன்சூரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த இரு மாணவர்களும் மன்சூரை கடுமையாக தாக்கியுள்ளனர். வகுப்பறையில் இருந்த மேஜை மீதும் மன்சூரை கடுமையாக மோதச்செய்துள்ளனர். இதில், மன்சூர் படுகாயமடைந்து கிழே விழுந்துள்ளார்.
மாணவர்களிடையே சண்டை நடைபெறுவது குறித்து ஆசிரியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக வகுப்பறைக்கு வந்த ஆசிரியர்கள் மாணவன் மன்சூர் படுகாயங்களுடன் கிழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மன்சூரை மீட்பு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், மன்சூரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், மன்சூரை தாக்கிவிட்டு பள்ளியில் இருந்து தப்பியோடிய சக மாணவர்கள் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வகுப்பறையில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட மோதலில் சக மாணவர்கள் தாக்கியதில் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story