பிரதமர் மோடி முன்னிலையில் பொக்ரானில் 7-ந் தேதி போர் விமானங்கள் சாகசம்
பிரதமர் மோடி முன்னிலையில் பொக்ரானில் 7-ந் தேதி இந்திய விமானப்படையின் ‘வாயு சக்தி’ சாகச நிகழ்ச்சி நடக்கிறது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி முன்னிலையில் பொக்ரானில் 7-ந் தேதி இந்திய விமானப்படையின் ‘வாயு சக்தி’ சாகச நிகழ்ச்சி நடக்கிறது. இதில், முதல்முறையாக ரபேல் விமானமும் பங்கேற்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டம் பொக்ரான் சரகத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘வாயு சக்தி’ என்ற விமானங்கள் சாகச நிகழ்ச்சியை இந்திய விமானப்படை நடத்தி வருகிறது. கடைசியாக 2019-ம் ஆண்டு இத்தகைய நிகழ்ச்சி நடந்தது.
இந்தநிலையில், வருகிற 7-ந் தேதி ‘வாயு சக்தி’ நிகழ்ச்சியை இந்திய விமானப்படை நடத்துகிறது. பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். காலை 10.30 மணி முதல் பகல் 12.30 மணிவரை நடக்கிறது.
நிகழ்ச்சியில், மொத்தம் 148 விமானங்கள் பங்கேற்கின்றன. இவற்றில் 109 விமானங்கள், போர் விமானங்கள் ஆகும். 24 ஹெலிகாப்டர்கள், 7 சரக்கு விமானங்கள் ஆகியவையும் பங்கேற்கின்றன.
ஜாக்குவார், சுகோய்-30, மிக்-29, தேஜாஸ், ரபேல், மிராஜ்-2000 ஆகிய விமானப்படை விமானங்கள் பங்கேற்கின்றன. ‘வாயு சக்தி’ சாகச நிகழ்ச்சியில், ரபேல் விமானம் பங்கேற்பது இதுவே முதல்முறை ஆகும்.
முழுமையான நடவடிக்கைகளுக்கு தயார்நிலையில் இருப்பதை காட்டும்வகையில், இந்த நிகழ்ச்சியை விமானப்படை நடத்துகிறது. நிகழ்ச்சியின் முதலில், 17 ஜாக்குவார் ரக விமானங்கள், 75-வது சுதந்திர தின ஆண்டை குறிக்கும்வகையில், வானத்தில் பறந்தபடி ‘75’ என்ற எண் வடிவத்தை உருவாக்கும். இறுதியாக, ரபேல், தேஜாஸ், சுகோய்-30 ரக விமானங்கள் சாகசம் நிகழ்த்தி காட்டும். அபாச்சி, சினூக் உள்ளிட்ட ஹெலிகாப்டர்களும், ஆகாஷ், ஸ்பைடர் ஏவுகணை தொகுப்புகளும் சாகசத்தில் ஈடுபடும் என்று விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story