மராட்டிய மந்திரி நவாப் மாலிக் மீதான வழக்கு; அமலாக்கத்துறை காவல் 7-ந் தேதி வரை நீட்டிப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மந்திரி நவாப் மாலிக்கின் அமலாக்கத்துறை காவல் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சமீபத்தில் வழக்குப்பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை பதிவு செய்தது. இதில் மராட்டிய மந்திரி நவாப் மாலிக் தாவூத் இப்ராகிம் தொடர்புடையவர்களிடம் நிலம் வாங்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மந்திரி நவாப் மாலிக்கை கடந்த 23-ந் தேதி கைது செய்து விசாரித்து வந்தது. இதில் விசாரணை காலம் முடிந்து நேற்று அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தியது.
அப்போது நீதிபதி ஆர்.என். ரோகடே நவாப் மாலிக் கடந்த 25 முதல் 27-ந் தேதி வரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது, வழக்கில் புதிய தகவல்கள் கிடைத்து இருப்பதை சுட்டி காட்டி அவரது அமலாக்கத்துறை காவலை வருகிற 7-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
மந்திரி நவாப் மாலிக் தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனு மீதான விசாரணை வருகிற 7-ந் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story