கர்நாடகா: காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவ கொலை


Image Courtesy: kannada.news18.com
x
Image Courtesy: kannada.news18.com
தினத்தந்தி 5 March 2022 6:54 PM IST (Updated: 5 March 2022 6:58 PM IST)
t-max-icont-min-icon

கலபுரகியில் வேறு சாதி பெண்ணை காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவ கொலை செய்யப்பட்டு உள்ளார். பெண்ணின் மாமாவை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு, 

கர்நாடகா மாநிலம் கலபுரகி டவுன் பி.என்.டி.காலனியில் வசித்து வந்தவர் பிரீத்தம். இவர் பச்சை குத்தும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பச்சை குத்த வந்த சுஷ்மிதா(21) என்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவிக்கும், பிரீத்தமுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் சுஷ்மிதா வீட்டிற்கு தெரியவந்தது.

ஆனால் பிரீத்தம் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் கடந்த ஆண்டு(2021) வீட்டைவிட்டு வெளியேறிய சுஷ்மிதா, பிரீத்தமை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் பிரீத்தமும், சுஷ்மிதாவும்  பெங்களூரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் 2 பேரும் கலபுரகிக்கு வந்தனர். அங்கு ஒரு வாடகை வீட்டிலும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரீத்தம், மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளை வழிமறித்த சுஷ்மிதாவின் மாமா அரவிந்த் உள்பட சிலர், சுஷ்மிதாவை கலப்பு திருமணம் செய்தது பற்றி கேட்டு பிரீத்தமிடம் தகராறு செய்தனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து சரமாரியாக தாக்கினர்.

இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த பிரீத்தம் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கலபுரகி டவுன் போலீசார் நடத்திய விசாரணையில் கலப்பு திருமணம் செய்த ஆத்திரத்தில் பிரீத்தமை, சுஷ்மிதா மாமா உள்ளிட்ட சிலர் ஆணவ கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட சுஷ்மிதாவின் மாமா உள்ளிட்ட சிலரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story