‘மக்கள் மருந்தக வாரம்’ - பிரதமர் மோடி இன்று பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார்!


‘மக்கள் மருந்தக வாரம்’ - பிரதமர் மோடி இன்று பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார்!
x
தினத்தந்தி 7 March 2022 8:55 AM IST (Updated: 7 March 2022 8:55 AM IST)
t-max-icont-min-icon

மக்களுக்கு மருந்துகள் மலிவான விலையில் கிடைக்க ஒவ்வொரு மாவட்டத்திலும், நாடு முழுவதும், 8,600க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் உள்ளன.

புதுடெல்லி,

பொதுமக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் நோக்கத்துடன் மத்திய அரசால், பிரதம மந்திரி பாரதிய ஜன அவுஷதி பரியோஜனா திட்டம் (மக்கள் மருந்தக திட்டம்), மருந்து துறை மற்றும் தேசிய இரசாயன மற்றும் உர அமைச்சகத்தால் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது

அதன்படி, கொண்டாடப்படும் மக்கள் மருந்தக தினத்தை முன்னிட்டு, மக்கள் மருந்தகங்களின் உரிமையாளர்கள், மக்கள் மருந்தக திட்டத்தின் பயனாளிகளுடன் இன்று மதியம் 12.30 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.  இந்த கலந்துரையாடலை தொடர்ந்து, ‘‘மக்கள் மருந்தகம் - நிறைவான பயன்’’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் பேசுகிறார். 

பொது மருந்துகளின் பயன்பாடு மற்றும் மக்கள் மருந்தக திட்டத்தின் பயன்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த, மக்கள் மருந்தக வாரம், நாடு முழுவதும்  மார்ச் 1ம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது.  

இந்த வாரம் முழுவதும், மக்கள் மருந்தக உறுதி யாத்திரை, தாய் சக்தி சம்மான், குழந்தைகளுக்கான மக்கள் மருந்தகம்,  மக்கள் மருந்தக விழிப்புணர்வு திட்டம்,  வாருங்கள்- மக்கள் மருந்தக நண்பராகுங்கள், மக்கள் மருந்தக ஆரோக்கிய மேளா போன்ற திட்டங்கள்  நடத்தப்படுகின்றன. 

தேசிய மருந்து துறையின் கீழ் இந்தியாவின் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகத்தால் ‘மக்கள் மருந்தக வாரம்’  மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.  

மக்களுக்கு மருந்துகள் மலிவான விலையில் கிடைக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும். நாடு முழுவதும், தற்போது 8,600க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள்  உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story