நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வீடு - பச்சிளம் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் கருகி பலி..!


நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வீடு - பச்சிளம் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் கருகி பலி..!
x
தினத்தந்தி 8 March 2022 9:11 AM IST (Updated: 8 March 2022 9:11 AM IST)
t-max-icont-min-icon

நள்ளிரவில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் கருகி இறந்தனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் தளவபுரம் வர்கலா நகரை சேர்ந்தவர் பிரதாபன் (62). இவர் அப்பகுதியில் உள்ள புத்தன் சந்தையில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

பிரதாபன் தனது மனைவி செர்லி (54), மூத்த மகன் அகில் (26), மருமகள் அபிராமி (24) மற்றும் பெயர் வைக்காத 8 மாத பெண் குழந்தை ஆகியோருடன் வர்கலா நகரில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான வீட்டில் இரண்டாவது மாடியில் வசித்து வருகிறார்கள். 

இந்நிலையில், பிரதாபன் வீட்டில் இருந்து இன்று அதிகாலை 1.45 மணி அளவில்  கரும்புகை வெளியேறியது. 

இதையறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் தீ எரிந்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் வர்க்கலா போலீசாருக்கும் தீயணைப்பு போலீசாருக்கும் விவரம் தெரிவித்தனர். 

தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பிரதாபன் அவரது மனைவி செர்லி, மகன் அகில், மருமகள் அபிராமி மற்றும் 8 மாத பச்சிளம் குழந்தை என 5 பேரும் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவனந்தபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேல் விசாரணை செய்து வருகிறார். 

தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து மின்கசிவு ஏற்பட்டு இருக்குமா என பரிசோதனை செய்தார்கள். ஆனால் மின் கசிவுக்கு எந்தவிதமான வாய்ப்பும் இல்லை என தெரிய வந்தது. 



இதனால், 5 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், வீடு தீப்பற்றியதை அறிந்து வேகமாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தபோது வீட்டின் அருகே இருந்து 5 பைக்குகள் வேகமாக சென்றதாக நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர். இதனால், இது கொலை சம்பவமாக இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் வீடு தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் பச்சிளம் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story