உக்ரைனின் சுமி நகரில் இருந்த 694 இந்திய மாணவர்களும் போல்டவாவுக்கு வருகை


உக்ரைனின் சுமி நகரில் இருந்த 694 இந்திய மாணவர்களும் போல்டவாவுக்கு வருகை
x
தினத்தந்தி 8 March 2022 5:57 PM IST (Updated: 8 March 2022 5:57 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனின் சுமி நகரில் சிக்கி இருந்த அனைத்து 694 இந்திய மாணவர்களும் போல்டவாவுக்கு இன்று வந்தடைந்து உள்ளனர்.



புதுடெல்லி,



உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 13வது நாளாக இன்று நீடித்து வருகிறது.  இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  அவர்களை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகளும் சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றன.  மொத்தமுள்ள 20 ஆயிரம் இந்தியர்களையும் மீட்போம் என மத்திய அரசு கூறியுள்ளது.

ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ், கடந்த பிப்ரவரி 22ந்தேதியில் இருந்து தொடங்கிய மீட்பு பணியில் நேற்றுவரை 17,400க்கும் கூடுதலானோர் நாட்டுக்கு திரும்பி அழைத்து வரப்பட்டு உள்ளனர் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில் தெரிவித்து இருந்தது.

மீட்பு பணி, போர் விவகாரம் பற்றி அதிகாரிகளுடன் பிரதமர் மோடி, அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.  ரஷியா அதிபர் மற்றும் உக்ரைன் அதிபருடனும் அவர் பேசி வருகிறார்.  அந்த வகையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த பேச்சின்போது, வடகிழக்கு உக்ரைனின் முக்கிய நகரமான சுமி நகரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க உதவி செய்யுமாறு உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று பேசினார்.  இந்த பேச்சு பற்றி  இந்தியாவில் உள்ள ரஷிய தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், உக்ரைனில் நடப்பு நிலவரம் பற்றி பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் ஆலோசனை மேற்கொண்டனர்.  35 நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சில், இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரை மீட்கும் மனிதநேய பணிகளுக்காக கீவ், மரியுபோல், கார்கிவ் மற்றும் சுமி ஆகிய நகரங்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள ரஷிய படைகள் முடிவு செய்துள்ளன.  உக்ரைனின் சுமி நகரில் இருந்து இந்தியர்களை மீட்க ரஷிய ராணுவம் ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது என பிரதமர் மோடியிடம் புதின் கூறியுள்ளார்.

எனினும், தேசியவாதிகள், படைகளை பயன்படுத்தி பல்வேறு வகையான தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.  போர் நடைபெறும் பகுதியில் இருந்து குடிமக்கள் வெளியேற்றம் தொடர்ந்து தடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார் என தூதரகம் தெரிவித்து உள்ளது.  இதனையடுத்து, ரஷிய தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடி, புதினுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

இந்நிலையில், சுமி நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மீட்பு பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி இன்று பதில் கூறும்போது, கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நேற்றிரவு நான் பேசினேன்.  694 இந்திய மாணவர்களும் தொடர்ந்து சுமி நகரிலேயே சிக்கி தவித்து வருகின்றனர் என தெரிய வந்தது.  இன்று அவர்கள் அனைவரும் போல்டவா நகருக்கு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.


Next Story