மேகதாது விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்க கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம்..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 March 2022 2:43 AM IST (Updated: 9 March 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது திட்ட விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்க இந்த வாரமே அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று கர்நாடக சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி நதி மூலம் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள ஆகிய மாநிலங்கள் பயனடைந்து வருகின்றன. இந்த நிலையில் கர்நாடகம் - தமிழ்நாடு இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

இதுஒருபுறம் இருக்க காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் மேகதாதுவில் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிதாக அணை கட்ட கர்நாடகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளிலும் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. மேலும் மத்திய அரசும் மேகதாது திட்டத்திற்கு இதுவரையில் அனுமதி வழங்கவில்லை.

கடந்த நில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த தென்மாநிலங்கள் மாநாட்டில் மத்திய ஜல் சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகம் - தமிழ்நாடு மாநிலங்கள் அமர்ந்து பேசி சுமுக முடிவை எட்ட தயார் என்றால் அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து கொடுக்கும் என்று கூறினார். அவரது இந்த மழுப்பலான பேச்சு இருமாநிலங்களுக்கும் புதிதாக இருந்தது.

இதற்கிடையே மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை உடனே அமல்படுத்தக்கோரி காங்கிரஸ் சார்பில் மேகதாதுவில் இருந்து பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மேகதாது திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதியை ஒதுக்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசும்போது, மேகதாது திட்டம் குறித்து குறிப்பிட்டு பேசினார். காங்கிரஸ் நடத்திய பாதயாத்திரை குறித்தும் அவர் எடுத்து கூறினார். அதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளித்து கூறியதாவது:-

மேகதாது திட்ட அறிக்கை கடந்த 2019-ம் ஆண்டு தான் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அது தற்போது காவிரி நிர்வாக ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது. மேலும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் தேவைப்படுகிறது. அத்துடன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. சுற்றுச்சூழல் துறை மற்றும் காவிரி நிர்வாக ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும் திட்ட பணிகள் தொடங்கப்படும். மேகதாது குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த கூட்டம் இந்த வாரமே கூட்டப்படும். அதில் சட்ட நிபுணர் குழுவும் கலந்து கொள்கிறது. இதில் மேகதாது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும். ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும். நாம் அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்போம் என்று பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story