பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி: நாடாளுமன்றம் 14-ந் தேதி கூடுகிறது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. கடந்த மாதம் 1-ந் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாவது பகுதியில் மாநிலங்களவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செயல்பட்டன. முதலாவது பகுதி, கடந்த மாதம் 11-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. இதில் மக்களவையும், மாநிலங்களவையும் காலை 11 மணி முதல் ஒரே நேரத்தில் செயல்படும். இரு அவைகளின் உறுப்பினர்களும் முன்பைப் போல அந்தந்த அவைகளின் கேலரிகள், அறைகளை பயன்படுத்துவார்கள். மாநிலங்களவை தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் நேற்று சந்தித்து, உறுப்பினர்களுக்கான இருக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். இரு அவைகளின் பொதுச் செயலாளர்களும், நாட்டில் கொரோனா 3-வது அலையின்போது குறைந்த தொற்று எண்ணிக்கை குறித்தும், விரிவான தடுப்பூசி ஏற்பாடுகள் குறித்தும் விவாதித்தனர்.
Related Tags :
Next Story