தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!!
தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க சி.பி.ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேசிய பங்கு சந்தை விவரங்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் தலைமை செயலதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நரேன் மற்றும் அவரது சகோதரர் ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோருக்கு எதிராக மத்திய புலனாய்வு பிரிவு (சி.பி.ஐ.) கடந்த பிப்ரவரி 18ந்தேதி லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது.
இதன் தொடர்ச்சியாக, தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் அதன் முன்னாள் மேலாண் இயக்குனரான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசகராகவும், முன்னாள் செயலாக்க அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தவர் என கூறப்படும் ஆனந்த் சுப்பிரமணியம், சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த மாதம் 24ந்தேதி இரவு சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கூடுதலாக இருவருக்கு தொடர்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதன்படி, ஆனந்திடம் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ கோர்ட் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story