மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.25 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது - 2 பேர் கைது
மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளிடமும் சோதனை நடத்தினர்.
அப்போது துபாயில் இருந்து மங்களூரு வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்திறங்கிய பயணி ஒருவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரை மடக்கி பிடித்த அதிகாரிகள், அவரின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ஐக்கிய அரபு நாட்டின் பணம் இருந்தது. அதன் இந்திய மதிப்பு ரூ.17 லட்சத்து 70 ஆயிரம் என்று கூறப்படுகிறது. அதையடுத்து அந்த பணத்தை கடத்தி வந்த மங்களூரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று கேரளா மாநிலம் காசர்கோடுவை சேர்ந்த பயணி ஒருவரை மடக்கி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் அமெரிக்க டாலர் பணம் கட்டுக்கட்டாக இருந்தது தெரியவந்தது. அதன் இந்திய மதிப்பு ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் என்று கூறப்படுகிறது. அதை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்றதாக கேரளா வாலிபரை கைது செய்தனர்.
மொத்தம் 2 பேரிடம் இருந்தும் ரூ.25 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story