உ.பி. தேர்தல்: பா.ஜ.க. 150 இடங்களுக்கு மேல் முன்னிலை; 2வது இடத்தில் சமாஜ்வாதி


உ.பி. தேர்தல்:  பா.ஜ.க. 150 இடங்களுக்கு மேல் முன்னிலை; 2வது இடத்தில் சமாஜ்வாதி
x
தினத்தந்தி 10 March 2022 3:55 AM GMT (Updated: 10 March 2022 4:10 AM GMT)

உத்தர பிரதேச தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் தங்களுடைய தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.



லக்னோ,


403 உறுப்பினர்களை கொண்ட உத்தர பிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.  வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.  எனினும், மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களில் முறைகேடு நடைபெறுகிறது என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்த குற்றச்சாட்டு வாரணாசியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடத்த வாய்ப்பில்லை என்று விளக்கினார்.  வாரணாசியில் வெளியில் எடுத்து செல்லப்பட்டவை பயிற்சிக்காக கொண்டு வரப்பட்ட எந்திரங்களாகும் என்று கூறி, நடந்த சம்பவம் குறித்தும் தெளிவுபடுத்தினார்.  

உத்தர பிரதேசத்தில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், மாநிலத்தில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவித்தன.  இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.  உத்தர பிரதேசம், கோவா மாநிலங்களில்  பா.ஜ.க முன்னிலை வகிக்கிறது.  இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், பா.ஜ.க. 150 தொகுதிகளுக்கும் கூடுதலாகவும், சமாஜ்வாதி கட்சி 69 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியிலும், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்.  தபால் வாக்கு எண்ணிக்கையில் நிஷாத் கட்சி வேட்பாளர் விவேகானந்தா பாண்டே, கட்டா தொகுதியிலும், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ரான்விஜய் சிங் ஹட்டா தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

இதனால், பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான முனைப்பில் உள்ளது.  சமாஜ்வாதி 2வது இடத்தில் எண்ணிக்கையில் பின்தொடர்ந்து வருகிறது.  மற்றவை 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  இந்த தேர்தலில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஓரிடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.


Next Story