12 மணி நிலவரம்: பா.ஜ.க.-273 சமாஜ்வாதி கட்சி-118 இடங்களில் முன்னிலை


12 மணி நிலவரம்:  பா.ஜ.க.-273 சமாஜ்வாதி கட்சி-118 இடங்களில் முன்னிலை
x
தினத்தந்தி 10 March 2022 12:12 PM IST (Updated: 10 March 2022 12:35 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் 12 மணி நிலவரத்தின்படி பா.ஜ.க.-273, சமாஜ்வாதி கட்சி-118 இடங்களில் முன்னிலையில் உள்ளது.



லக்னோ,

403 உறுப்பினர்களை கொண்ட உத்தர பிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.  வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.  எனினும், மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களில் முறைகேடு நடைபெறுகிறது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்த குற்றச்சாட்டு வாரணாசியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடத்த வாய்ப்பில்லை என்று விளக்கினார்.  வாரணாசியில் வெளியில் எடுத்து செல்லப்பட்டவை பயிற்சிக்காக கொண்டு வரப்பட்ட எந்திரங்களாகும் என்று கூறி, நடந்த சம்பவம் குறித்தும் தெளிவுப்படுத்தினார்.

5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமீறல் சம்பவங்களுடன் தொடர்புடைய 2,270 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.  5 மாநில தேர்தலில் போட்டியிடும் மொத்தமுள்ள 6,900 வேட்பாளர்களில் 1,600 பேர் குற்ற பின்னணி கொண்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் தலைமை தேர்தல் ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், மாநிலத்தில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவித்தன.  இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.  உத்தர பிரதேசம், கோவா மாநிலங்களில்  பா.ஜ.க முன்னிலை வகிக்கிறது.  இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், தொடக்கம் முதலே பா.ஜ.க. முன்னிலையில் இருந்தது.  போட்டி கட்சிகளில் சமாஜ்வாதி கட்சி 2வது இடத்தில் இருந்து வந்தது.

உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.  இதனால், அவர் மீண்டும் ஆட்சியை அமைத்திட உள்ளார்.  சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.  தபால் வாக்கு எண்ணிக்கையில் நிஷாத் கட்சி வேட்பாளர் விவேகானந்தா பாண்டே, கட்டா தொகுதியிலும், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ரான்விஜய் சிங் ஹட்டா தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான முனைப்பில் உள்ளது.  அக்கட்சி 275க்கும் கூடுதலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.  சமாஜ்வாதி 2வது இடத்தில் எண்ணிக்கையில் (118 இடங்கள்) பின்தொடர்ந்து வருகிறது.  மற்றவை 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  இந்த தேர்தலில், காங்கிரஸ்-3, பகுஜன் சமாஜ்-4 இடங்களில் முன்னிலை.  ஆம் ஆத்மி கட்சி ஓரிடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.

கடந்த 2017ம் ஆண்டு உத்தரபிரதேச தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பா.ஜ.க. 312 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது.  உத்தர பிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.  இந்த தேர்தலின்போது, அக்கட்சியின் மூத்த தலைவர்கள், 300 தொகுதிகளுக்கும் கூடுதலான கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைப்போம் என பிரசாரத்தில் கூறி வந்தனர்.  பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் காணப்படுகிறது.  ஆட்சி அமைப்பதற்கான 202 இடங்களை காட்டிலும் கூடுதலான இடங்களில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது.  270 தொகுதிகளுக்கும் கூடுதலான இடங்களில் முன்னிலையில் உள்ளது.  யோகி ஆதித்யநாத் 12 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.  இதனை தொடர்ந்து, லக்னோவில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தின் முன் திரண்ட கட்சி தொண்டர்கள் கட்சி கொடிகளை அசைத்து ஆரவாரம் எழுப்பினர்.


Next Story