புல்டோசர் முன் சைக்கிள் நிற்க முடியாது: உ.பி. தேர்தல் வெற்றி குறித்து ஹேமமாலினி
உத்தர பிரதேசத்தில் எங்களுடைய அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் என முன்பே தெரியும் என பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினி தெரிவித்து உள்ளார்.
லக்னோ,
403 உறுப்பினர்களை கொண்ட உத்தர பிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இதில், பா.ஜ.க. 270க்கும் மேற்பட்ட இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 120க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, உத்தர பிரதேசத்தில் எங்களுடைய அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எங்களுக்கு முன்பே தெரியும். ஒவ்வொரு வளர்ச்சிக்கான விசயங்களிலும் நாங்கள் பணியாற்றி உள்ளோம். அதனாலேயே, பொதுமக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். புல்டோசருக்கு முன் எதுவும் வரமுடியாது. அது சைக்கிள் ஆகட்டும். அல்லது வேறு எதுவாகவும் இருக்கட்டும். ஒரு நிமிடத்தில் துவம்சம் செய்து விடும் என கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆட்சியில், கிரிமினல்களால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களை புல்டோசர்களை கொண்டு அதிகாரிகள் இடித்து தள்ளினர். சைக்கிளை தேர்தல் சின்னம் ஆக கொண்ட, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூட முன்பு, புல்டோசர் பாபா என யோகியை அழைத்துள்ளார். இதுபற்றி தேர்தல் கூட்டமொன்றில் யோகி பேசும்போது கூட, விரைவுசாலை அமைக்க பயன்படும் புல்டோசர், மாபியா (குற்றவாளிகள் கொண்ட கும்பலை) அழிக்கவும் சிறந்த ஒன்றாக உள்ளது என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story