சுயேச்சைகள் ஆதரவுடன் கோவா மாநிலத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 March 2022 1:24 AM IST (Updated: 11 March 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

கோவா மாநிலத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஆட்சி அமைக்க ஒரு மாநில கட்சியும், 3 சுயேச்சைகளும் ஆதரவு கடிதம் அளித்துள்ளதாக பா.ஜனதா தெரிவித்துள்ளது.

பனாஜி, 

பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் கோவா மாநிலத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை ேதர்தல் நடந்தது. பா.ஜனதா-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது.

மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் போட்டியிட்டன.

நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. தொடக்கத்தில், காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்க தொடங்கியது.

ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் நிலைமை மாறியது. பா.ஜனதா அதிக இடங்களில் முன்னிலைக்கு வந்தது. அதே நிலை நீடித்து பா.ஜனதா 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பிரமோத் சவந்த் மற்றும் மந்திரிகள் பலர் வெற்றி பெற்றனர்.

கோவா மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க குைறந்தபட்சம் 21 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். எனவே, தனிப்பெரும்பான்மைக்கு பா.ஜனதாவுக்கு ஒரு தொகுதி குறைவாக உள்ளது.

இருப்பினும், வெற்றி பெற்ற 3 சுயேச்சைகள், பா.ஜனதாவுக்கு ஆதரவு தர முன்வந்துள்ளதாக பா.ஜனதா தெரிவித்துள்து.

இதுகுறித்து கோவா மாநில முதல்-மந்திரி பிரமோத் சவந்த் கூறியதாவது:-

பா.ஜனதா ஆட்சி மீது கோவா மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. கடந்த 10 ஆண்டு கால வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் ஓட்டு போட்டுள்ளனர்.

பா.ஜனதா ஆட்சி அமைக்க யார் ஆதரவு அளித்தாலும் வரவேற்போம். 3 சுயேச்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் மாநில பா.ஜனதா தலைவர் சதானந்த் ஷெட் தனவாடேவிடம் ஆலோசனை நடத்தி உள்ளனர் என்று அவர் கூறினார்.

கோவா மாநில பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளரும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

ஆட்சி அமைக்க சுயேச்சைகள் மற்றும் இதர மாநில கட்சிகளின் ஆதரவை ஏற்றுக்கொள்வோம். எப்போது ஆட்சி அமைக்க உரிமை கோருவது என்பதை பா.ஜனதா ஆட்சி மன்றக்குழு சொன்ன பிறகு முடிவு செய்வோம் என்று அவர் கூறினார்.

பா.ஜனதாவுக்கு மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியும், 3 சுயேச்சைகளும் ஆதரவு கடிதம் அளித்துள்ளதாக மாநில பா.ஜனதா தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே தெரிவித்தார். எனவே, பா.ஜனதாவின் பலம் 25 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. 13 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றிருந்தது. பின்னர், மாநில கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இப்போதும், அவர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த தேர்தலில், 3 தம்பதிகள் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட சுகாதார மந்திரி விஸ்வஜித் ரானே, அவருடைய மனைவி திவ்யா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பா.ஜனதா வேட்பாளர்களான அடனாசியோ மான்செரட்டேவும், அவருடைய மனைவி ஜெனிபரும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் களத்தில் நின்ற மைக்கேல் லோபோ, அவருடைய மனைவி டெலிலா ஆகியோரும் ஜெயித்துள்ளனர்.

ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 2 தம்பதியர் தோல்வி அடைந்துள்ளனர்.

Next Story