காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கும் - பசவராஜ் பொம்மை திட்டவட்டம்


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கும் - பசவராஜ் பொம்மை திட்டவட்டம்
x
தினத்தந்தி 12 March 2022 3:08 AM IST (Updated: 12 March 2022 3:08 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறினார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

பெங்களூருவின் மக்கள்தொகை தற்போது 1.30 கோடியாக உள்ளது. இது வருகிற 2040-ம் ஆண்டுக்குள் 4 கோடி வரை உயரும் நிலை உள்ளது. அதனால் பெங்களூருவை சுற்றிலும் 4 செயற்கைகோள் நகரங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

அந்த 4 நகரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கும் வகையில் இருக்க வேண்டும். அதாவது சுகாதார நகரம், ஒருங்கிணைந்த தொழில் நகரம், விமானவியல், பாதுகாப்புத்துறை தொடர்பான விஷயங்கள் நடைபெற முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பெங்களூருவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அந்த புதிய செயற்கைகோள் நகரங்களில் அனைத்து விதமான வசதிகளும் இருக்கும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனங்களை போல் கர்நாடகத்தில் 6 கர்நாடக தொழில்நுட்ப நிறுவனங்களை (கே.ஐ.டி.) உருவாக்க முடிவு செய்துள்ளேன்.

இதன் மூலம் ஐ.ஐ.டி.யில் படிக்க வேண்டும் என்று கருதி அதில் வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு இந்த நிறுவனங்களில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். மேகதாது திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்கும். அதற்கான பணிகள் தொடங்கும். அதனால்தான் பட்ஜெட்டில் மேகதாது திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். அனுமதி கிடைத்ததும் இந்த ஆண்டே மேகதாது திட்ட பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story