போர் பதற்றம்: உக்ரைன் மனைவி, குழந்தையுடன் நாடு திரும்பிய கேரள இளைஞர்...!
உக்ரைன் பெண்ணை திருமணம் செய்த இளைஞர் ஆபரேஷன் கங்கா மூலம் மனைவி மற்றும் 2 மாத குழந்தையுடன் நாடு திரும்பினார்.
கொச்சி,
உக்ரைன் பெண்ணை திருமணம் செய்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் தன்னுடைய மனைவி மற்றும் 2 மாத குழந்தையுடன் நாடு திரும்பினார்.
கேரளாவைச் சேர்ந்த ரனீஷ் ஜோசப் உக்ரைனில் மாணவர் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது சுமியைச் சேர்ந்த விக்டோரியா என்பவரை கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷிய போரால் சுமியில் மாட்டிக் கொண்ட ஜோசப், நேற்று இரவு டெல்லியில் இருந்து 180 பேருடன் கொச்சி விமான நிலையம் வந்த விமானத்தில் மனைவி விக்டோரியா மற்றும் குழந்தை ஜோசப் ரபேலுடன் நாடு திரும்பினார்.
இதுகுறித்து ஜோசப் கூறியதாவது:-
'நான் இப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடந்த 14 நாட்களாக நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக சுமியில் இருந்தோம். அங்கு இருந்த அசாத்திய சூழலில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டோம். இப்போது சொந்த ஊர் திரும்பி குடும்பத்தினரை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. பேருந்து, ரெயில், விமானம் என்று 4 நாள் தொடர்ச்சியான பயணத்திற்கு பிறகு இப்போது ஊருக்கு திரும்பியுள்ளோம்.
இந்த பயணத்தின் போது எங்களுடன் இருந்த பலரும் எங்கள் குழந்தையை பார்த்துக்கொள்வதில் எங்களுக்கு மிகவும் உதவியாயிருந்தார்கள். இப்போது எங்களுக்கு ஓய்வு தேவை' என்று கூறினார்.
மேலும் அவரது மனைவி விக்டோரியா, 'அங்கு நிறைய பிரச்சினைகள் இருந்தது. இப்போது அனைவரையும் நேரில் சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கேரளாவிற்கு நான் வருவது இதுவே முதல் முறையாகும்' என்று கூறினார்.
Related Tags :
Next Story