இரு தரப்பு எல்லை பிரச்சினையில் இந்தியா, சீனா 12 மணி நேரம் பேச்சுவார்த்தை; பேசியது என்ன?
இரு தரப்பு எல்லை பிரச்சினையில் இந்தியா, சீனா இடையே 12 மணி நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பேசியது என்ன என்பது தெரிய வந்துள்ளது.
இரு தரப்பு எல்லை பிரச்சினை
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நெடுங்காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த நிலையில் 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன துருப்புகள் பயங்கரமான ஆயுதங்களுடன் அதிரடியாய் வந்து இந்திய வீரர்களுடன் கடுமையாக மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனத்தரப்பில் 4 பேர் பலியானதாக சீனா ஒப்புக்கொண்டது. இந்த நிகழ்வின்போது பின்வாங்கி ஓடிய சீன துருப்புகள் 38 பேர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தது பின்னர் தெரிய வந்தது.
படைகளை திரும்பப்பெற பேச்சு
அதில் இருந்து எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோடு அருகில் இரு தரப்பினரும் தலா 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினரை குவித்துள்ளனர். இதனால் அங்கு எப்போதும் பதற்றம் நிலவி வருகிறது.
ஆனாலும், மோதல்கள் உண்டாக வாய்ப்பு உள்ள பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக ராணுவ மட்டத்திலான இரு தரப்பு பேச்சு வார்த்தை இன்னொரு பக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
வரலாற்றில் எஞ்சி இருக்கும் பிராந்திய மோதல்கள், இரு தரப்பு ஒத்துழைப்பின் ஒட்டுமொத்த நலன்களைப் பாதிக்க இந்தியாவும், சீனாவும் அனுமதிக்கக்கூடாது என்று சமீபத்தில் சீன வெளியுறவு மந்திரி வாங் யி கருத்து தெரிவித்தார்.
15-வது சுற்று பேச்சு
அந்த வகையில் 15-வது சுற்று பேச்சுவார்த்தை, இந்திய தரப்பில் உள்ள சுசூல் மோல்டோ எல்லை சந்திப்பில் முன்தினம் காலை 10.30 மணிக்கு தொடங்கி நடந்தது. இரவு சுமார் 11 மணிக்கு முடிந்தது.
சுமார் 12 மணி நேரம் நடந்த இந்த பேச்சு வார்த்தையின்போது, கோக்ரா ஹாட் ஸ்பிரிங் பகுதியில் உள்ள ரோந்துப்புள்ளி 15-ல் இருந்து படைகள் வாபஸ்பெறப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.
அதைத்தொடர்ந்து கிழக்கு லடாக்கில் பதற்றத்தை குறைக்கவும் இந்தியா அழுத்தம் கொடுத்தது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, ஊடகங்களுக்கு பேச்சுவார்த்தை தொடர்பான முறையான அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பாக, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரிகள் இடையே பேச்சு வார்த்தையின் முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்பு இந்தியா, சீனா இடையே 14 சுற்று பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அதன் பின்னரும் கிழக்கு லடாக்கில் பிரச்சினை தீர்க்கப்படாத பகுதிகளாக பிபி-15, டெம்சோக், டெப்சாங் ஆகியவை உள்ளன. இவற்றில் சீனர்கள் பிடிவாதமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story