சோனியா தலைமையில் காங்கிரஸ் காரியக்கமிட்டி இன்று கூடுகிறது
காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கட்சித்தலைவர் சோனியா தலைமையில் நடக்கிறது.
ேதர்தல் தோல்வி
சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பஞ்சாப்பை ஆம் ஆத்மியும், மீதமுள்ள 4 மாநிலங்களை பா.ஜனதாவும் கைப்பற்றின.
ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க முடியாததுடன், தன் வசம் வைத்திருந்த பஞ்சாப்பையும் இழந்து விட்டது.
இது காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி முன்னணி தலைவர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கட்சித்தலைமை மீது விமர்சனங்களை வீசத்தொடங்கி உள்ளனர்.
மாற்றம் அவசியம்
குறிப்பாக கட்சியின் அமைப்பு மற்றும் தலைமையில் மாற்றம் கொண்டு வருமாறு ஏற்கனவே போர்க்கொடி தூக்கி வரும் ‘ஜி-23’ குழுைவ சேர்ந்த மூத்த தலைவர்கள், மீண்டும் ஒருமுறை கட்சித்தலைமையை நோக்கி விமர்சனங்களை வைத்துள்ளனர்.
தேர்தல் தோல்வியை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர்கள் ஒன்றுகூடி விவாதித்தனர். குலாம் நபி ஆசாத்தின் வீட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்த குழுவை சேர்ந்த பல தலைவர்கள் பங்கேற்றனர்.
அப்போது, 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறித்து அதிர்ச்சி வெளியிட்ட அவர்கள், காங்கிரசை மீட்டெடுப்பதற்கான வழிகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர்.
இந்த குழுவை சேர்ந்தவரும், எம்.பி.யுமான சசிதரூர், இந்த தோல்வி குறித்து கூறுகையில், நாம் வெற்றிபெற வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சியில் மாற்றம் தவிர்க்க இயலாதது எனக்கூறியுள்ளார்.
விரிவான ஆலோசனை
இவ்வாறு தேர்தல் ேதால்வி தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியும், விரக்தியும் அதிகரித்து வரும் நிலையில் கட்சியின் அதிகாரம் மக்க அமைப்பான காரியக்கமிட்டி கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூடுகிறது.
டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தை கட்சியின் தலைவர் சோனியா தலைமை தாங்கி நடத்துகிறார். இந்த கூட்டத்தில் காரியக்கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் முக்கியமாக சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் கட்சி அடைந்துள்ள மோசமான தோல்வி குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர்
அத்துடன் கட்சியின் அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் மற்றும் கட்சிக்கு புதிய தலைமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பாதியில் கட்சி மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று காலையில் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டமும் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பாதி நாளை தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story