பெங்களூரு உள்பட 77 இடங்களில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை: ரூ.6 கோடி நகை-பணம் சிக்கின
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் பேரில் அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள் என பெங்களூரு உள்பட 77 இடங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ.6 கோடிக்கு மேல் நகை, பணம் சிக்கின.
பெங்களூரு,
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு சொத்து சேர்க்கும் அரசு அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அதன்படி, கடந்த மாதம்(பிப்ரவரி) பெங்களூரு மாநகராட்சி அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். இந்த நிலையில், ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு வருமானத்துக்கு அதிகமாக சட்டவிரோதமாக சொத்து குவித்திருக்கும் அரசு அதிகாரிகள் பற்றி ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது.
இதையடுத்து, அந்த அதிகாரிகளை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை 6 மணியளவில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அரசு அதிகாரிகள் 18 பேரின் வீடு, அலுவலகங்கள், அவர்களது உறவினர்களின் வீடுகளில் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஒட்டு மொத்தமாக 18 அரசு அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருந்தது. இந்த சோதனையில் 100 உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 400-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு இருந்தார்கள்.
பெங்களூருவில் 3 அரசு அதிகாரிகளின் வீடுகளில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தினார்கள். அதில், பெங்களூரு போக்குவரத்து துறையில் கூடுதல் கமிஷனராக பணியாற்றி வருபவர் ஞானேந்திரகுமார். இவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் உறவினர் வீடு என 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது ஞானேந்திரகுமார் வீட்டில் இருந்து தங்க நகைகள், பணம், முக்கிய சொத்து பத்திரங்கள் சிக்கியதாக தெரிகிறது.
இதுபோன்று, பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் நகர திட்ட அதிகாரியாக இருந்து வருபவர் ராகேஷ்குமார். இவரது வீடு, அலுவலகத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தினார்கள். ராகேஷ்குமார் வீட்டில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் மற்றும் ஆவணங்களை போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர். அவருக்கு சொந்தமாக பெங்களூருவில் வீடுகள், சொகுசு கார் இருப்பது தெரியவந்தது. அதிகாரி ராகேஷ்குமாரின் வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பெங்களூருவில் தொழில்துறை மற்றும் வணிகத்துறையின் கூடுதல் இயக்குனராக பணியாற்றுபவர் பி.கே.சிவக்குமார். இவருக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள 5 இடங்களில் 36 போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அவரது வீட்டில் சிக்கிய ஆவணங்கள் மூலமாக, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் வனத்துறை அதிகாரியாக இருந்து வருபவர் சிவானந்த் பி.சரணப்பா சேடகி. இவரது வீட்டில் ஊழல் தடுப்பு படை போலீசார் நடத்திய சோதனையின் போது ரூ.16 லட்சத்திற்கான பாண்டு பத்திரம், 4 கிலோ வெள்ளி, ஒரு கிலோ தங்க நகைகள், ரூ.20 லட்சம் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 3½ கிலோ சந்தன மரத்துண்டுகளும் அதிகாரி சிவானந்த் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. அதிகாரி சிவானந்த் உறவினர் வீட்டில் இருந்து ரூ.12 லட்சமும் சிக்கியதாக தெரிகிறது.
இதுபோல், யாதகிரியில் வனத்துறை அதிகாரியாக இருக்கும் ரமேஷ் கன்கட்டி, பெலகாவி மாவட்டம் கோகாக்கில் உள்ள உதவி என்ஜினீயர் பசவராஜ் சேகர் ரெட்டி பட்டீல், விஜயாப்புரா மாவட்டத்தில் திட்ட வளர்ச்சி அதிகாரியாக இருக்கும் கோபிநாத், ராமநகரில் உதவி கமிஷனராக உள்ள மஞ்சுநாத், துமகூருவில் சமூக நலத்துறை அலுவலகத்தில் மேலாளராக இருக்கும் சீனிவாஸ், தாவணகெரே மாவட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அதிகாரியாக பணியாற்றும் மகேஷ்வரப்பாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.
இதுதவிர ஹாவேரி மாவட்டம் ஏ.பி.எம்.சி.யில் உதவி என்ஜினீயராக இருக்கும் கிருஷ்ணன், சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் கலால்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் செல்வராஜ், தேசிய நெடுஞ்சாலை துறையில் உதவி என்ஜினீயராக இருக்கும் கிரீஷ், மைசூரு மாவட்டம் விஜயநகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் பாலகிருஷ்ணா, சிக்கமகளூரு மாவட்டத்தில் பொதுத்துறை என்ஜினீயராக இருக்கும் கவிரங்கப்பா, ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்காவில் கிருஷ்ணா நீர்ப்பாசன திட்டத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றும் அசோக் ரெட்டி, தட்சிண கன்னடா மாவட்டத்தில் உதவி என்ஜினீயராக இருக்கும் தயாசுந்தர் ராஜு ஆகிய 18 அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு இருந்தது.
சோதனை நடத்தப்பட்ட 18 அரசு அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.6 கோடிக்கும் மேல் நகை, பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. அந்த அதிகாரிகள் வீடுகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பத்திரங்கள் சிக்கியது. ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் ஏராளமான வீடுகள், வீட்டுமனைகள், ஏக்கர் கணக்கில் நிலங்கள் இருப்பதற்கான ஆவணங்களும் சோதனையில் சிக்கியது. அந்த அரசு அதிகாரிகள் தங்களது குடும்பத்தினரின் பெயரில் சொத்துகள் வாங்கி குவித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அரசு அதிகாரிகள் 18 பேரும் தங்களது வருமானத்தை காட்டிலும் சட்டவிரோதமாக பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பதாகவும், அதுபற்றி பரிசீலனை நடத்தி வருவதாகவும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 18 அதிகாரிகளின் வங்கி கணக்குகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். சில அதிகாரிகள் வங்கி லாக்கர்களில் பணம், தங்க நகைகளை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த அதிகாரிகளின் வங்கி லாக்கர்களில் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.
சோதனைக்கு உள்ளான 18 அதிகாரிகளில் ஒரு சிலரது வீட்டில் நடந்த சோதனை மட்டுமே நிறைவு பெற்றிருக்கிறது. மற்ற அதிகாரிகளின் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ள அதிகாரிகளிடம் ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 18 அதிகாரிகளும் வருமானத்தை காட்டிலும் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி இருப்பது குவித்திருப்பதால், அவர்கள் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிகாரிகளின் வீடுகளில் சிக்கிய ஆவணங்களை பரிசீலனை நடத்திய பின்பு, அவர்களிடம் விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு வழங்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story