உக்ரைனில் உயிரிழந்த நவீனின் உடலை மருத்துவ படிப்புக்கு தானமளிக்க முடிவு; தந்தை பேட்டி


உக்ரைனில் உயிரிழந்த நவீனின் உடலை மருத்துவ படிப்புக்கு தானமளிக்க முடிவு; தந்தை பேட்டி
x
தினத்தந்தி 19 March 2022 6:32 AM IST (Updated: 19 March 2022 6:32 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் குண்டுவீச்சில் உயிரிழந்த நவீனின் உடலை மருத்துவ படிப்புக்காக தானமளிக்க முடிவு செய்துள்ளோம் என அவரது தந்தை பேட்டியில் கூறியுள்ளார்.



பெங்களூரு,


நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 24 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.  உக்ரைனும் தனியாளாக ரஷியாவை எதிர்கொண்டு வருகிறது.  இந்த நிலையில், கடந்த 1-ந்தேதி ரஷிய படையினர் உக்ரைன் மீது குண்டுவீசியபோது, கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சலகேரியை சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவர் உயிரிழந்தார்.

மாணவர் இறந்த செய்தி அறிந்ததும் பிரதமர் மோடி, கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் மாணவரின் பெற்றோரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர். அப்போது, மாணவரின் உடலை மீட்டு தாயகம் கொண்டுவரக்கோரி மாணவரின் பெற்றோர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். 

பாதுகாப்பு குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் மோடி, உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடலை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மாணவர் நவீனின் உடல் வருகிற திங்கட்கிழமை அதிகாலையில் கர்நாடக விமான நிலையத்திற்கு வந்து சேரும்  என பசவராஜ் பொம்மை கூறினார்.

இறுதி சடங்குகளுக்காக மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டுகோள் விடுத்த, நவீனின் தந்தை சங்கரப்பா செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், உக்ரைனில் குண்டுவீச்சில் உயிரிழந்த நவீனின் உடல் வருகிற 21ந்தேதி அதிகாலை 3 மணியளவில் பெங்களூருவுக்கு வந்து சேரும்.  அதன்பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்படும்.

நவீனின் உடலை மருத்துவம் படிக்க கூடிய மாணவ மாணவிகளுக்காக தேவநகரியில் உள்ள எஸ்.எஸ். மருத்துவமனைக்கு தானமளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.  21 வயதுடைய நவீன், உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள தேசிய மருத்துவ பல்கலை கழகத்தில் படித்து வந்த மாணவர் ஆவார்.

இந்திய மருத்துவ மாணவரான நவீனின் மரணம் பற்றி விசாரணை மேற்கொள்வோம் என்று ரஷியா தெரிவித்து உள்ளது.


Next Story