பஞ்சாப் அமைச்சரவை; ஒரு பெண் உள்பட 10 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பொறுப்பேற்பு
பஞ்சாப் அமைச்சரவையில் ஒரு பெண் உள்பட 10 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக இன்று பொறுப்பேற்று கொண்டனர்.
சண்டிகர்,
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பஞ்சாபின் புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான், பகத் சிங் பிறந்த ஊரான கத்கர் கலன் கிராமத்தில் கடந்த 16-ந்தேதி பதவியேற்றார்.
மேலும், பஞ்சாபில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-மந்திரி பகவந்த் மான் உட்பட எம்.எல்.ஏக்கள் அனைவரும் கடந்த 2 தினங்களுக்கு முன் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் இந்தர்பீர் சிங் நிஜ்ஜார் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த நிலையில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை இன்று காலை 11 மணியளவில் பதவியேற்று கொண்டது.
இதன்படி, அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பிரம்ம சங்கர் ஜிம்பா, ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் ஆகியோர் பஞ்சாப் அமைச்சரவைக்கான மந்திரிகளாக முதலில் இன்று பொறுப்பேற்று கொண்டனர். அவர்களை தொடர்ந்து, லால் சந்த் கடாருசக், குர்மித் சிங் மீத் ஹேயர், குல்தீப் சிங் தலிவால், லால்ஜித் சிங் புல்லார், ஹர்பால் சிங் சீமா, டாக்டர் பல்ஜீத் கவுர், ஹர்பஜன் சிங் ஈ.டி.ஓ., டாக்டர் விஜய் சிங்லா ஆகியோரும் மந்திரிகளாக பொறுப்பேற்று கொண்டனர்.
அவர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்துள்ளார். மந்திரிகள் பதவியேற்றவுடன், பஞ்சாப் சிவில் செயலகத்தில் பொறுப்பேற்கின்றனர். அதன் பின்னர் மதியம் 12.30 மணிக்கு ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
Related Tags :
Next Story