கல்வியை காவிமயமாக்கும் அரசு; அதில் என்ன தவறு? - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு


கல்வியை காவிமயமாக்கும் அரசு; அதில் என்ன தவறு? - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
x
தினத்தந்தி 19 March 2022 6:25 PM IST (Updated: 19 March 2022 7:51 PM IST)
t-max-icont-min-icon

அறிவின் பொக்கிஷமாக விளங்கும் நமது வேதங்களை அறிய சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள தேவ் சமஸ்கிருதி விஸ்வவித்யாலயாவில்  "அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான தெற்காசிய நிறுவனத்தை" துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்து உரையாற்றினார். 

அப்போது அவர் நமது நாட்டின் பாரம்பரிய பெருமைகள், தாய்மொழிக் கல்வி முறை  மற்றும் ஆங்கிலேய ஆட்சியின் ஏகாதிபத்தியம் உள்ளிட பல விஷயங்களை முன்னிறுத்தி பேசினார். 

அவர் பேசியதாவது:-

இந்தியர்கள் தங்கள் "காலனித்துவ மனநிலையை" கைவிட வேண்டும். இந்தியர்கள் தங்கள் இந்திய அடையாளத்தில் பெருமைகொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.

கல்வி முறையை இந்தியமயமாக்கல் தான், இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையின் மையமாகும். இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை, தாய்மொழிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. கல்வியை காவிமயமாக்குவதாக அரசு மீது குற்றம் சாட்டப்படுகிறது, ஆனால் அதில் என்ன தவறு உள்ளது. 

ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சி

மெக்காலே(பிரிட்டிஷ்) கல்வி முறையை, நாட்டிலிருந்து முழுமையாக நிராகரிக்க வேண்டும். பிரிட்டிஷ் கல்வி முறை, நம் நாட்டில் ஒரு வெளிநாட்டு மொழியை(ஆங்கிலத்தை) கல்வி பயிற்றுமொழியாக திணித்தது. கல்வியை உயரடுக்கு மக்களுக்கு மட்டும் வசப்படுத்தியது. இதனால் பெருவாரியான மக்களின் கல்வி உரிமை  பறிபோனது

பல நூற்றாண்டு காலனிய ஆட்சி நம்மை ஒரு தாழ்ந்த இனமாக பார்க்க கற்றுக் கொடுத்தது. நம்முடைய சொந்த கலாச்சாரத்தை, பாரம்பரிய ஞானத்தை இழிவுபடுத்த கற்றுக்கொடுக்கப்பட்டோம். இதன்காரணமாக நாம் ஒரு தேசமாக இணைந்து முன்னேறுவதில் தடங்கலை சந்தித்தோம்.

இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம் 

நமது பாரம்பரியம், கலாச்சாரம், முன்னோர்கள் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். நாம் நமது முன்னோர்களின் பாதைகளுக்கு திரும்ப வேண்டும். நம் குழந்தைகளுக்கு அவர்களின் இந்திய அடையாளத்தில் பெருமை கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும். 

கல்வியைத் தவிர, குழந்தைகளுக்கு இயற்கையுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.கொரோன பெருந்தொற்று காலத்தில் இயற்கையுடன் நெருக்கமாக வாழும் மக்கள் குறைவாகவே பாதிக்கப்பட்டனர்.

சமஸ்கிருதம் கற்க வேண்டும்

அறிவின் பொக்கிஷமாக விளங்கும் நமது வேதங்களை அறிய சமஸ்கிருதம் கற்க வேண்டும். முடிந்தவரை பல இந்திய மொழிகளைக் கற்க வேண்டும். நாம் நம் தாய்மொழியை நேசிக்க வேண்டும். 

தாய்மொழி பெருமை

உங்கள் தாய்மொழி உங்கள் கண்பார்வை போன்றது, அதேசமயம் வெளிநாட்டு மொழி உங்கள் கண்ணாடி போன்றது.

டிஜிட்டல் உலகில் மொபைல் போன் உள்ளிட்ட சாதனங்களில் அனைத்து கேட்ஜெட் அறிவிப்புகளும் அவரவர் தாய்மொழியில் வெளியிடப்படும் நாளை எதிர்நோக்கி உள்ளேன்.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பிரமுகர்கள், ஆங்கிலம் தெரிந்தாலும் கூட, அவர்கள் தங்கள் சொந்த மொழியில் பேசுவதில் பெருமை கொள்வதால், அவர்கள் தங்கள் தாய்மொழியில் பேசுகின்றனர்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

“அனைவரும் மகிழ்ச்சியாக வாழட்டும்,  யாதும் ஊரே யாவரும் கேளிர்”  ஆகியன நமது பண்டைய நூல்களில் உள்ள தத்துவங்கள், இவையே இன்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டு முறைகளாக உள்ளன.

பொதுவான நோக்கம் கொண்டு செயல்படும் அனைத்து தெற்காசிய நாடுகளுடனும், இந்தியா வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது. சிந்து சமவெளி நாகரீகம், ஆப்கானிஸ்தானில் இருந்து கங்கை சமவெளி வரை பரவியிருந்தது. 

எந்த நாட்டையும் முதலில் தாக்கக்கூடாது என்ற நமது கொள்கை உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது.வன்முறையை விட அகிம்சையையும் அமைதியையும் தேர்ந்தெடுத்த மாவீரன் அசோக சக்கரவர்த்தியின் நாடு இது.

உலகம் முழுவதிலுமிருந்து மக்கள், பண்டைய இந்தியப் பல்கலைக் கழகங்களான நாளந்தா மற்றும் தக்ஷிலாவில் படிக்க வந்த காலம் உண்டு. அத்தகைய  செழுமையின் உச்சத்தில் இந்தியா இருந்தபோதும், எந்த நாட்டையும் தாக்க நினைத்ததில்லை. ஏனென்றால் உலகிற்கு அமைதி தேவை என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.

நல்ல எதிர்காலத்திற்காக இயற்கையும் கலாச்சாரமும் இணைந்த செயல்பாடு என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story