கேரளாவில் மகன், மருமகள் மற்றும் பேத்திகளை உயிரோடு எரித்துக் கொன்ற முதியவர் கைது


ஹமீது, தீயில் கருகி பலியான முகம்மது பைசல், ஷீபா, மெஹர், அஸ்னா
x
ஹமீது, தீயில் கருகி பலியான முகம்மது பைசல், ஷீபா, மெஹர், அஸ்னா
தினத்தந்தி 20 March 2022 2:04 AM IST (Updated: 20 March 2022 2:04 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு கதவை பூட்டி மகன், மருமகள், 2 பேத்திகளை உயிரோடு எரித்துக் கொன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

சொத்து தகராறு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழை சீனிக்குழியை சேர்ந்தவர் ஹமீது (வயது 79). இவருடைய மகன் முகம்மது பைசல் (45), மருமகள் ஷீபா (45), பேத்திகள் மெஹர் (16), அஸ்னா (14).

இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் முகம்மது பைசலுக்கும், ஹமீதுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வீட்டு கதவை பூட்டி...

இந்த தொடர் சம்பவங்களால் மகன் முகம்மது பைசல் மீது ஹமீதுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த ஆத்திரம் ஒரு கட்டத்தில் மகனின் குடும்பத்தையே கொல்ல வேண்டும் என்ற மனநிலை ஹமீதுக்கு உருவானது.

நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் வழக்கம்போல் படுக்கை அறைக்குள் சென்று தூங்கினர். இதனை கவனித்த ஹமீது வீட்டு அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டினார்.

தீ வைத்த கொடூரம்

பிறகு ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை அந்த அறைக்குள் ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது. இந்த தீ குபீரென அறை முழுவதும் பரவி தூங்கி கொண்டிருந்தவர்கள் மீதும் பற்றியது.

என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் தீயின் கோரப்பிடியில் 4 பேரும் சிக்கி அலறி துடித்தனர். அங்குமிங்கும் ஓடியபடி அறை கதவை திறக்க முயன்றனர். ஆனால் அறையின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் 4 பேரால் வெளியே வரமுடியவில்லை. சிறிது நேரத்தில் 4 பேருடைய சத்தமும் ஓய்ந்தது. ஆனாலும் தொடர்ந்து அந்த அறையில் தீ எரிந்து கொண்டிருந்தது.

4 பேர் உடல் கருகி பலி

இதற்கிடையே இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஹமீது தன்னுடைய உறவினர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, மகன் மற்றும் மகனின் குடும்பத்தினரை உயிரோடு தீ வைத்து கொன்று விட்டேன் என கூறியுள்ளார். இதனை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் பதற்றத்துடன் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

பிறகு அறையை சோதனையிட்ட போது முகம்மது பைசல், ஷீபா, மெஹர், அஸ்னா ஆகிய 4 பேரும் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். பின்னர் போலீசார் 4 பேருடைய உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இடுக்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக தொடுபுழா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹமீதுவை கைது செய்தனர்.


Next Story