மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் தீர்மானம் சட்டவிரோதமானது - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோதமானது என்று கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகம் மட்டுமல்லாது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பாய்கிறது. ஆனால் காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் கர்நாடகம், தமிழ்நாடு இடையே நீண்டகால பிரச்சினை இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழக பட்ஜெட் மீதான விவாதம் மாநில சட்டசபையில் இன்று நடைபெற்றது. அப்போது, காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்துகட்சிகளும் தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்ததால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதற்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோதமானது. இந்த முடிவிற்கு கர்நாடக அரசு சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். பிற மாநில உரிமைகளில் தலையிடுவது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் மேகதாது திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
காவிரி அதிகார வரம்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை வழங்கிய பிறகு எஞ்சிய நீரை உரிமை கோர கர்நாடகாவுக்கு உரிமை உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story