போலி சான்றிதழ் மூலம் கொரோனா இறப்பு நிவாரணம் முறைகேடு - நாளை உத்தரவு பிறப்பிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு
போலி சான்றிதழ் மூலம் கொரோனா இறப்பு நிவாரணம் முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.
புதுடெல்லி,
கொரோனா இறப்பு போலி சான்றிதழ் அளித்து நிவாரணம் பெற்ற முறைகேடு விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கொரோனா இறப்பு சான்றிதழ் மாதிரிகளை ஆந்திரம், மகாராஷ்டிரம், குஜராத், கேரளம் ஆகிய மாநிலங்களில் சரிபார்க்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். மனுதாரர் கௌரவ் பன்சல், இந்து கலாசாரத்தில் இறப்பு சார் சடங்குகள் 30 நாள் வரை நடைபெறுவது வாடிக்கை, கொரோனா இறப்பு நிவாரணம் கோரி விண்ணப்பிக்க 90 நாட்கள் வரை நீடித்தால் மேலும் போதுமானதாக அமையும் என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், கொரோனாவால் ஏற்கெனவே இறந்தவர்களின் குடும்பத்தார் இறப்பு நிவாரணம் கோரி விண்ணப்பிக்க 60 நாள் வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த அவகாசம் 90 நாட்களாக நீட்டிக்கப்படும், இந்த விவகாரம் தொடர்பான உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
கொரோனா இறப்பு போலி சான்றிதழ் அளித்து நிவாரணம் பெற்ற முறைகேடு விவகாரத்தை, மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்து மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story