நாடு முழுவதும் 31 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன - மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் வளர்ச்சி பணிகளுக்காக கடந்த 2020-21-ம் ஆண்டில் சுமார் 31 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த துறையின் மந்திரி நிதின் கட்காரியின் பணிகளை பாராட்டினர். அதேநேரம் பல்வேறு விவகாரத்தில் தங்கள் கவலைகளையும் பதிவு செய்தனர். அந்த வகையில் அருணாசல பிரதேச எம்.பி. தபிர் காவோ, ஸ்பைடர் மேனின் வலைப்பின்னல் போல உத்தரகாண்டின் காலாபனியை கூட சாலை நெட்வொர்க் அடைந்திருப்பதாக பாராட்டினார்.
கேரளாவில் நெடுஞ்சாலை பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக கட்காரிக்கு நன்றி தெரிவித்த மாநில மார்க்சிஸ்ட் எம்.பி. ஆரிப், சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பதில் பல ஆண்டுகளாக மக்களிடம் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதாகவும், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் கவலை தெரிவித்தார்.
இந்த விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. விஸ்ணுபிரசாத் கூறுகையில், ‘அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 63.5 லட்சம் கி.மீ. சாலை இணைப்புடன் உலக அளவில் 2-வது இடத்தில் இந்தியா இருப்பதற்காக ஆளுங்கட்சியினர் மிகவும் பெருமிதம் அடைகின்றனர். ஆனால் இந்த விரிவாக்கம் ஒருநாள் இரவில் வந்துவிடவில்லை. நேரு, ராஜீவ் காந்தி போன்ற முந்தைய காங்கிரஸ் அரசுகள் அடித்தளமிட்டதால்தான் இன்று 2-வது பெரிய சாலை இணைப்பை இந்தியா பெற்றிருக்கிறது’ என்று தெரிவித்தார்.
பள்ளி கல்வி தொடர்பாக மக்களவையில் கல்வித்துறை இணை மந்திரி அன்னபூர்ணா தேவி நேற்று தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 95 சதவீதத்துக்கும் அதிகமான கிராமங்கள் 5 கி.மீ. சுற்றளவில் உயர்நிலைப்பள்ளிகளை பெற்றிருக்கின்றன என கூறினார்.
அதேநேரம் 90 சதவீத கிராமங்கள் 7 கி.மீ. தொலைவில் மேல்நிலைப்பள்ளிகளை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் நலத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் தாக்கல் செய்த அறிக்கையில், பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்க, 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்ட தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனம் பாலியல் புகார்களை விசாரிக்க சிறப்பு குழுவை அமைத்திருக்க வேண்டும் என கூறினார்.
சுற்றுச்சூழல் மந்திரியாகவும் பதவி வகித்து வரும் பூபேந்தர் யாதவ், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், நாடு முழுவதும் கடந்த 2020-21-ம் ஆண்டில் மட்டும் வளர்ச்சி பணிகளுக்காக சுமார் 31 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். எனினும் டெல்லியில் ஒரு மரமும் வெட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
வெட்டப்பட்ட மரங்களுக்கு இழப்பீடாக ரூ.359 கோடி காடு வளர்ப்புக்கு செலவிடப்பட்டதாகவும், 3.6 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டதாகவும் எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய துணை கேள்விகளுக்கு பெட்ரோலிய மந்திரி ஹர்தீப் சிங் புரி எழுத்து மூலம் பதில் அளித்தார்.
அதில் அவர் கூறுகையில், ‘நாளொன்றுக்கு மொத்தம் 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் தேவை. அதில் 60 சதவீதம் வளைகுடா நாடுகளில் இருந்து வருகிறது. ரஷியாவில் இருந்து இறக்குமதி குறைந்து உள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரை வெறும் 4.19 லட்சம் டன்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இது மொத்த தேவையில் 0.2 சதவீதம் ஆகும்’ என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் முன்கூட்டியே நிலவி வரும் வெப்ப அலைகள் குறித்து பா.ஜனதா எம்.பி. விகாஸ் மகாத்மா மாநிலங்களவையில் கவலை வெளியிட்டார்.
இதை கருத்தில் கொண்ட அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, இந்த வெப்ப அலைகளில் இருந்து மக்களை பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடுமாறு மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வியிடம் அறிவுறுத்தினார்.
கங்கை நதி தூய்மை திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ஜல்சக்தி துறை இணை மந்திரி பிஸ்வேஸ்வர் டுடு, கங்கை நதியை மாசுபடுத்துவதாக 5 மாநிலங்களில் கண்டறியப்பட்ட 1,080 தொழிற்சாலைகளில் 190 நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டதாக கூறினார்.
Related Tags :
Next Story