"தி காஷ்மீர் ஃபைல்ஸ்" படத்தை திரையிடுவதால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு..!!
இப்படத்தை திரையிடப்படுவதன் மூலம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டா,
காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர்.
அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கபட்டது.
இந்த பயங்கரவாத தாக்குதல்கள், எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
இதற்கிடையில், காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் வரிச்சலுகை வழங்கியுள்ளன.
இந்த நிலையில் இப்படத்தை திரையிடப்படுவதன் மூலம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் எந்த இடத்திலும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எந்த அமைப்பும் எந்தக் கூட்டங்களையும் நடத்தக்கூடாது எனவும் மாவட்டத்தில் எந்த ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இன்று முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என கோட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story