எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
புதுடெல்லி,
கடந்த நவம்பர் 4 ஆம் தேதிக்குப் பிறகு ஏறத்தாழ 4 மாதங்களாக பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கவில்லை. 5 மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாகவே எரிபொருள் விலை உயர்த்தப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.
137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்பட்டுள்ளது. லிட்டருக்கு தலா 80 காசுகள் பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட்டது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் உருளை ஒன்று ரூ.50 அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின. மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பியதோடு, விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என முழக்கமிட்டனர். காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ’5 மாநிலத் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை உயரும் என்றே எதிர்பார்த்தோம். அது நடந்துவிட்டது’ என்றார்.
தொடர்ந்து அவையிலிருந்து காங்கிரஸ், திமுக, திரிணமூல், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையிலும் அவை தொடங்கியவுடன் விதி எண் 267-ன் கீழ் விவாதிக்க அனுமதி கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. ஆனால், அவைத் தலைவர் அனுமதி தராத காரணத்தால், அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, மாநிலங்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story