இந்தியாவில் 6 ஆயிரத்து 100 ரயில் நிலையங்களில் அதிவேக வைஃபை இணையவசதி: ரெயில்வே தகவல்
இந்தியாவில் உள்ள 6 ஆயிரத்து 100 ரயில் நிலையங்களில் அதிவேக வைஃபை இணையவசதி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ரயில் நிலையங்களில் இலவசமாக அதிவேக வைஃபை இணைய வசதியை வழங்கும் திட்டம் 2015 ரயில்வே பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்டது.
அதன்படி நாட்டில் பல ரயில் நிலையங்களில் மக்கள் இலவசமாக இணைய வசதியை பயன்படுத்துக்கூடிய திட்டமானது படிப்படியாக செயல்பாட்டிற்கு வந்தது. இந்த நிலையில், நேற்று வடக்கு ரயில்வேயின் லக்னோ பிரிவில் உள்ள உபர்னி ரயில் நிலையத்தில் (ரேபரேலி மாவட்டம், உ.பி.) இலவச வைஃபை வசதி தொடங்கப்பட்டது.
இதன் மூலம், இந்தியாவில் 6 ஆயிரத்து 100 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாக இந்தியாவின் மிகப்பெரிய நடுநிலை தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு வழங்குனர்களில் ஒன்றான ரயில்டெல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மொத்தம் 6,100 ரயில் நிலையங்களில், 5,000 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் கிராமப்புறங்களில் உள்ளதாகவும், வடகிழக்கு பிராந்தியத்தின் பல நிலையங்கள் மற்றும் காஷ்மீரில் உள்ள 15 ரயில் நிலையங்கள் என நாடு முழுவதும் உள்ள பல தொலைதூர ரயில் நிலையங்களில் வைஃபை வசதிகள் கிடைக்கின்றன" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும் இலவச இணைய வசதி என்ற நிலைக்கு மிக அருகில் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story