தெலுங்கானா: மரக்கடையில் பயங்கர தீ விபத்து - 11 தொழிலாளர்கள் உடல் கருகி பலி


தெலுங்கானா: மரக்கடையில் பயங்கர தீ விபத்து - 11 தொழிலாளர்கள் உடல் கருகி பலி
x
தினத்தந்தி 23 March 2022 9:21 AM IST (Updated: 23 March 2022 9:21 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் மரக்கடை குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 11 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் பொஹிகுடா என்ற பகுதியில் மரம் சார்ந்த பொருட்கள், பழைய பொருட்கள் விற்பனை விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையின் குடோனில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் நிறைய இருந்தன. மேலும், இந்த கடையில் வேலை செய்து வரும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் குடோனிலேயே தங்கி வந்தனர்.

இந்நிலையில், அந்த கடையின் குடோனில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அதிகாலை என்பதால் தொழிலாளர்கள் 12 பேரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.

தீயின் அதீத வெப்பத்தை உணர்த்து உறக்கத்தில் இருந்து திடீரென எழுந்த தொழிலாளர்கள் குடோனில் இருந்து வெளியே தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர். இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், தீ வேகமாக பரவியதால் தொழிலாளர்கள் 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒரே ஒரு தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

குடோனில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீ விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story