"தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ் ..!!
ஐஏஎஸ் நியாஸ் கான் கூறிய கருத்து மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
போபால்,
காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர்.
அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கபட்டது.
இந்த பயங்கரவாத தாக்குதல்கள், எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
இதற்கிடையில், காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக மத்தியபிரதேச மாநிலத்தின் பொதுப்பணித் துறையின் துணைச் செயலாளராக இருக்கும் ஐஏஎஸ் நியாஸ் கானுக்கு அந்த மாநில அரசு விரைவில் நோட்டீஸ் அனுப்ப உள்ளது.
இது தொடர்பாக ஐஏஎஸ் நியாஸ் கான் " தி காஷ்மீர் ஃபைல்ஸ்" பட தயாரிப்பாளர்களை குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் "இந்தியாவில் பல மாநிலங்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதை திரைப்படமாக எடுக்க வேண்டும். இந்த சிறுபான்மை சமூகம் பூச்சிகள் அல்ல அவர்களும் நாட்டின் குடிமக்கள்" என தெரிவித்து இருந்தார். இது அந்த மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் " கானின் பதிவுகளை பார்த்தேன் . இது ஒரு தீவிரமான பிரச்சினை. அவர் அரசு அதிகாரிகளுக்கான வரம்பை மீறியுள்ளார். மாநில அரசு அவருக்கு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி அவரின் கருத்துக்கான காரணங்களை கேட்கும் " என தெரிவித்தார்.
Related Tags :
Next Story