சில்வர்லைன் ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கிறோம் - கேரள முதல் மந்திரி
சில்வர்லைன் ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கேரளாவில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமரின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக, கேரளாவின் தொழில்துறை முன்னேற்றத்திற்காக கொச்சி- பெங்களூரு தொழில் வழித்தடத்திற்கான நிலம் கையகப்படுத்தும் செயல்முறை வேகமாக முன்னேறி வருவதாக முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். இதற்காக மாநில அரசு தற்போதைய சந்தை விலையைவிட நான்கு மடங்கு இழப்பீடு வழங்கும் என்று உறுதியளித்தார்.
மேலும், இம்மாத தொடக்கத்தில் சில்வர்லைன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். ஆனால், சில்வர்லைன் திட்டத்திற்கு எதிராக கேரளா முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடியை முதல் மந்திரி பினராயி விஜயன் சந்தித்து பேசியுள்ளார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, சில்வர்லைன் ரெயில் திட்டம் குறித்து மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் பேச பிரதமர் ஒப்புக்கொண்டார். சில்வர்லைன் ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இந்த விவாதம் சாதகமான பலனைத் தரும். வேகமான, வசதியான மற்றும் பாதுகாப்பான பயண வழிமுறைகள் காலத்தின் தேவை. சில்வர்லைன் அதை நிறைவேற்றுகிறது. இந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பற்றது என்ற கவலை வீணானது என்று கூறினார்.
Related Tags :
Next Story