டெல்லியில் 17-வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சூட்கேசில் சடலமாக கண்டெடுப்பு
தலைநகர் டெல்லியில் கேட்பாரற்றுக்கிடந்த சூட்கேசிற்குள் சிறுவனது சடலம் கழுத்தறுக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள ரோஹினி பகுதியை சேர்ந்த 17-வயது சிறுவன் நேற்று இரவு திடீரென மாயமானான். இதையடுத்து, அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதற்கிடையில், இன்று காலை மன்கோல்புரி பகுதியில் உள்ள பீர் பாபா பஜார் பகுதியில், சந்தேகத்திற்கிடமான வகையில், சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.
இதைக் கவனித்த உள்ளூர்வாசிகள் உடனடியக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்ததும் பதறினர். ஏனெனில், சூட்கேசிற்குள் சிறுவன் ஒருவனது சடலம் கழுத்தறுக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்து, காணாமல் போன சிறுவர்களின் பட்டியலை பெற்றனர்.
இதில், சூட்கேசில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது ரோஹினி பகுதியை சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்தது. சிறுவன் எதற்காக கொலை செய்யப்பட்டான்? கொலை செய்து சூட்கேசில் வைத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story