நகை, பணம் திருடிய சகோதரர்கள் உள்பட 4 பேர் கைது


நகை, பணம் திருடிய சகோதரர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 27 March 2022 12:03 AM IST (Updated: 27 March 2022 12:03 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் பூட்டி இருந்த வீடுகளின் கதவை உடைத்து தங்க நகை, பணம் திருடிய சகோதரர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 92 பவுன் தங்க நகை, ரூ. 52 ஆயிரம் மீட்கப்பட்டது.

மதுரை, 
மதுரையில் பூட்டி இருந்த வீடுகளின் கதவை உடைத்து தங்க நகை, பணம் திருடிய சகோதரர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 92 பவுன் தங்க நகை, ரூ. 52 ஆயிரம் மீட்கப்பட்டது.
திருட்டு
மதுரையில் திருப்பாலை, தல்லாகுளம், செல்லூர், கூடல் புதூர், தெப்பக்குளம், அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பூட்டி இருந்த வீடுகளின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
அதன் பேரில் வடக்கு துணை கமிஷனர் டாக்டர் ராஜ சேகரன் மேற்பார்வையில் தல்லாகுளம் உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அதில் தெப்பக்குளம் ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் வினோத்குமார் (வயது 45), விஷ்ணுகுமார் (38) மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த ராமச்சந்திரன் (29), தினேஷ் (30) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
92 பவுன் நகை பறிமுதல்
அப்போது அவர்கள் நகரில் பல்வேறு இடங்களில் கதவுகளை உடைத்து நகைகளை திருடியது தெரியவந்தது. மேலும் அவர்கள் வீட்டின் கதவுகளை உடைக்கும் ஆயுதங் களையும் வைத்திருந்தனர். அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 92 பவுன் தங்க நகைகள், ரூ.52 ஆயிரத்து 500-ஐ கைப்பற்றினார்கள்.மேலும் அவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சூர்யாநகரை சேர்ந்த ரவீந்திரனின் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 38 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கு உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமரா
இதில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார். இந்த வழக்குகளில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பயனுள்ளதாக இருந்தது. எனவே பொதுமக்கள், வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி குற்றவாளிகளை அடையாளம் காண உதவ வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

Next Story