கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதித்திருப்பதால் மாணவிகளை பெற்றோர் சமாதானப்படுத்த வேண்டும்- டி.கே.சிவக்குமார்
ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதித்திருப்பதால் மாணவிகளை பெற்றோர் சமாதானப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
சமாதானப்படுத்த வேண்டும்
ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதற்கு கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தீர்ப்புக்கு எதிராக சிலர் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள். ஐகோர்ட்டு தீர்ப்பை ஒருசிலர் வரவேற்றாலும், மற்றொரு தரப்பினர் எதிர்க்கிறார்கள். ஐகோர்ட்டு தீர்ப்பு சரியில்லை என்று சொல்வதற்கு நான் தயாராக இல்லை. தீர்ப்பு, தீர்ப்பு தான்.
தற்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்க உள்ளது. தேர்வு எழுத வரும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரவும், தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் தவறு செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களை பெற்றோர் தான் சமாதானப்படுத்த வேண்டும். ஏனெனில் மாணவிகளுக்கு அடம் பிடிக்கும் குணம் இருக்க தான் செய்யும்.
பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள்
தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் எண்ணத்தை பெற்றோர் மாற்ற வேண்டும். கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு, அரசின் உத்தரவு பற்றி மாணவிகளுக்கு தெளிவாக எடுத்து கூற வேண்டும். ஹிஜாப் விவகாரத்தில் தேர்வு எழுதாமல் புறக்கணிக்க கூடாது. ஹிஜாப் மற்றும் சுவாமிகள் அணிந்திருக்கும் தலைப்பாகை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தான் கூறிய கருத்துக்கு, விளக்கம் அளித்திருக்கிறார்.
அவர் விளக்கம் அளித்த பின்பு, அந்த விவகாரம் பற்றி பேசக்கூடாது. டுவிட்டர் பதிவு மூலமாகவும் சித்தராமையா தனது கருத்து பற்றி விளக்கம் அளித்திருக்கிறார். சுவாமிகள் பற்றி மிகப்பெரிய மரியாதை இருப்பதாகவும் கூறி இருக்கிறார். அதன்பிறகும் இந்த விவகாரத்தை பெரிது படுத்துவது சரியல்ல. தேசிய கொடியை அவமதித்து ஈசுவரப்பா பேசி இருந்தார். இதுவரை அவர் மன்னிப்பு கூட கேட்கவில்லை. ஹிஜாப் விவகாரத்தில் பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள். அவர்களது வேலையை செய்யட்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story