2-ஆண்டுகளுக்குப் பின் வழக்கமான சர்வதேச விமான சேவை இன்று முதல் தொடக்கம்


2-ஆண்டுகளுக்குப் பின் வழக்கமான  சர்வதேச விமான சேவை இன்று முதல் தொடக்கம்
x
தினத்தந்தி 27 March 2022 7:50 AM IST (Updated: 27 March 2022 7:50 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்குக்கு பின்பு, 2 ஆண்டுகள் கழித்து இன்று முதல் (மார்ச் 27) சர்வதேச விமான சேவையை இந்தியா மீண்டும் தொடங்குகிறது.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் கொரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது. இதன் காரணமாக இந்தியாவிலும் கொரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் நாடு முழுவதும்  ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. 

இதனால், அனைத்து விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டன. எட்டு மாதங்கள் வரையில் நீடித்த இந்த ஊரடங்கை தொடர்ந்தது, உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. 

எனினும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை "வந்தே பாரத்" திட்டத்தின் மூலம் மத்திய அரசு இந்தியா அழைத்து வந்தது. பயோ பபுள் முறையில் குறிப்பிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் அடிப்படையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.  இந்த நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து உள்ளதால், சர்வதேச விமான போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு நிகராக மீண்டும் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. 


Next Story