மேற்குவங்காளத்தில் நடத்ததை போன்று உ.பி., அசாம், கர்நாடகாவில் வன்முறை நடத்துள்ளது - மம்தா


மேற்குவங்காளத்தில் நடத்ததை போன்று உ.பி., அசாம், கர்நாடகாவில் வன்முறை நடத்துள்ளது - மம்தா
x
தினத்தந்தி 27 March 2022 6:07 PM IST (Updated: 27 March 2022 6:07 PM IST)
t-max-icont-min-icon

மேற்குவங்காளத்தின் ராம்பூர்கட்டில் நடந்ததை போன்று உ.பி., அசாம், கர்நாடகாவில் வன்முறை சம்பவங்கள் நடத்துள்ளது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் பீர்ப்ஹம் மாவட்டம் ராம்பூர்கட் என்ற பகுதியில் உள்ள பக்டூய் என்ற கிராமத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் பகது ஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை கொல்லப்பட்டார். இதனால், அவரது தரப்பு ஆதரவாளர்கள் பக்டூய் கிராமத்தில் சேர்ந்த 8 பேரை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது.

இதற்கிடையில், இந்த வன்முறை சம்பவத்தால் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, ராம்பூர்கட் வன்முறை தொடர்பாக அவர் கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக மம்தா கூறுகையில், ராம்பூர்கட் வன்முறை சம்பவம் ஒரு சதித்திட்டம். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அது நல்ல முடிவுதான். ஆனால், பாஜகவின் வழிகளை மட்டும் சிபிஐ பின்பற்றினால் நாங்கள் போராட தயாராக உள்ளோம்.

ஒரு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர் வேறு ஒரு கட்சியினரால் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே விமர்சிக்கப்படுகிறது. இந்த வன்முறை ஏற்பட உண்மையான காரணம் என்ன என்பது குறித்து கண்டறியும் விசாரணைக்காக நாங்கள் நிறைய நடவடிக்கை எடுத்துள்ளோம். 

ராம்பூர்கட் வன்முறை போன்று உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, திரிபுரா, அசாமிலும் வன்முறை நடந்துள்ளது. இந்த பகுதிகளில் எங்கள் கட்சியினர் வன்முறை நடந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால், பீர்ப்ஹமில் வன்முறை நடத்த இடத்தை பார்வையிட எந்த கட்சியையும் நாங்கள் தடுக்கவில்லை’ என்றார்.

Next Story