நாடாளுமன்ற தேர்தலுக்கு, பிராந்திய கமிஷனர்கள் நியமிக்க பரிசீலனை..!!


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 28 March 2022 4:26 AM IST (Updated: 28 March 2022 4:26 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிராந்திய தேர்தல் கமிஷனர்களை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனின் கருத்தை நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டுள்ளது.

புதுடெல்லி, 

2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிராந்திய தேர்தல் கமிஷனர்களை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனின் கருத்தை நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டுள்ளது.

ஜனநாயக நாடுகளில் ஆட்சியாளர்களை குடிமக்களே தேர்வு செய்யும் வகையில் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதற்காக பிரத்யேக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை, நாடாளுமன்ற தேர்தலை தலைமை தேர்தல் கமிஷன் நடத்துகிறது. இந்த தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும், அமைதியான முறையிலும் நடந்தேறுவதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அதன் தலைமை தேர்தல் அதிகாரிகளை, தலைைம தேர்தல் கமிஷன் நம்பியுள்ளது.

மாநிலங்களின் இந்த தலைமை தேர்தல் அதிகாரிகள் பெரும்பாலும் தேர்தல் ஆணையத்தின் “மூட்டுக்கள்” என்ேற அழைக்கப்படுகிறார்கள்.

இதைத்தவிர, நாட்டில் நடைபெறும் பல்வேறு தேர்தல்களின்போது, தேர்தல் கமிஷனுக்கு உதவுவதற்காக பிராந்திய தேர்தல் கமிஷனர்களை நியமிக்கவும் அரசியல்சாசனத்தில் வழிவகை உள்ளது. அரசியல்சாசனத்தின் 324-வது பிரிவின் 4-வது உட்பிரிவு இந்த வழிமுறையை வழங்குகிறது.

அதன் அடிப்படையில் நாட்டில் 1951-ம் ஆண்டு நடந்த முதல் மக்களவை தேர்தலின்போது பம்பாய் (தற்போதைய மும்பை), பாட்னாவில் 6 மாதங்களுக்கு பிராந்திய தேர்தல் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

அதன் பிறகு இந்த பிராந்திய கமிஷனர்கள் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள சட்டத்துறையின் 2022-23-ம் ஆண்டுக்கான மானியக்கோரிக்கையில் பிராந்திய கமிஷனர்கள் தொடர்பான சட்டம் மற்றும் பணியாளர் நலத்துறையின் அறிக்கை இடம்பெற்று உள்ளது.

அதில், தேவைப்பட்டால் பிராந்திய தேர்தல் கமிஷனர்களை ஜனாதிபதி நியமிக்கலாம் என்பதையும், அதற்கான அரசியல்சாசன வழிமுறை இருப்பதையும் இந்த நிலைக்குழு கவனத்தில் எடுத்து உள்ளது.

இந்திய தேர்தல் கமிஷன், அதன் தேவைகளுக்கு ஏற்ப உகந்த அளவிலான பணியாளர்களை கொண்டிருக்க வேண்டும் என்று இந்த நிலைக்குழு கருதுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

அதன்படி, வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக பிராந்திய கமிஷனர்களை நியமிப்பது குறித்த தனது கருத்துகளை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனிடம் கேட்கப்பட்டு உள்ளதாக சுஷில் மோடி தலைமையிலான இந்த நிைலக்குழு அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

Next Story